பெட்ரோல்- டீசல் விலை
சென்னையில் 22வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை . பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அணை நீர்மட்டம்
பவானிசாகர் அணை நீர்மட்டம் – 82.67 அடி, நீர் இருப்பு – 17.1 டிஎம்சி, நீர்வரத்து – 361 கனஅடி, நீர் வெளியேற்றம் – 1,005 கன அடி.
போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு
காங்கிரஸ் தலைமை அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணி நடத்த காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜராகும்போது பேரணி நடத்தபோவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.
டெல்லியில் போராட்டம் நடத்த திரண்ட காங்கிரஸ் கட்சியினர் கைது
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜராகிரார். இந்நிலையில் இதை கண்டித்து அக்கட்சியினர் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தினர். இதனால் அவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக இன்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் நாளையும் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பேரணியில் காவலர் தாக்கியதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டதாக காங். செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தகவல் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து ஏற்பட்டதில் நெரிசலில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர் சக்கரத்தின் அச்சு முறிந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து ஏற்பட்டதில் நெரிசலில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மீரா மிதுன் நண்பர் ஷாம் அபிஷேக் தாக்கல் செய்த மனுவை, மனுவை வாபஸ் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே புதுமண தம்பதி மோகன் மற்றும் சரண்யா வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோகன் மற்றும் சரண்யா 4 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு ஊர் திரும்பிய நிலையில், சரண்யாவின் சகோதரர் சக்திவேல் என்பவர் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் புதிய தலைவராக ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாசு கட்டுப்பாடு தலைவராக இருந்த உதயன் வன உயிரின பாதுகாப்பு இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமம் ரூ.44.07 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. 2023-27 வரையிலான ஐபிஎல் தொடர்களை ஒளிபரப்ப 2 நிறுவனங்கள் தனித்தனியே ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
தமிழகத்தில் 7 வனத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வன உயிரின பாதுகாப்பு நிறுவன இயக்குனராக உதயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனராக தீபக் பில்கி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை, கே.கே.நகரில் டாக்ஸி ஓட்டுனர் ரவி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவலர் செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் ஐசக் ஆகியோருக்கு 16ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து, நெல்லை மாவட்ட 2வது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆறுமுகம் உத்தரவிட்டுள்ளார்
கோவில்களில் அன்னை தமிழில் வழிபாடு செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். சிறப்பு கட்டணத்தில் 60% பங்குகளை அர்ச்சகர்களுக்கு வழங்க வேண்டும் என அனைத்து இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை பிரபல படுத்தக்கூடாது. பந்தயம் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதமானது. சூதாட்டம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிதி மற்றும் சமூக ஆபத்தை ஏற்படுத்துகிறது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
தருமபுரி மாவட்டம் பாரதிபுரம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பெண்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் 18 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி வளாகங்களில் உள்ள கழிவறைத் தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கல்வி பயில்வோருக்கு தரமான உணவு தயாரித்து உரிய நேரத்தில் வழங்கவும் சத்துணவு மைய பணியாளர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்
சிறையில் இருந்தால்தான் தலைவர் என்பது இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர்தான். நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை, படிப்படியாக ஏறி வருகிறேன். என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்
சென்னை, கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த சம்பவத்தில், ஸ்டான்லி மருத்துவமனையில் மாஜிஸ்ட்ரேட் லட்சுமி முன்பாக ராஜசேகரின் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது
மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்
சென்னை, நுங்கம்பாக்கத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆளுநர் பதவியிலிருந்து விலகி ஆர்.எஸ்.எஸ்.,காரராக தொண்டாற்ற போக வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்
காந்தி குடும்பத்தின் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை பாதுகாக்கவே காங்கிரஸ் இன்று பேரணி நடத்துகிறது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி விமர்சித்துள்ளார்
விசா முறைகேடு வழக்கு தொடர்பான கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை மறுதினம் மீண்டும் விசாரிக்கிறது. முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
திருவள்ளூர் வடகரை பள்ளியை ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வகுப்பில் அமர்ந்து தமிழ் பாடத்தை கவனித்தார். 10 வகுப்பு ஆசிரியர் மாணவர்களுக்கு தமிழ்பாடம் நடத்துவதை முதலமைச்சர் கவனித்தார். மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவருடன் இணைந்து பாடம் நடத்துவதை கவனித்தார்
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி விசாரணைக்காக இன்று டெல்லி அமலாக்கத்துறையில் பேரணி மூலம் ஆஜரானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் ராகுல்காந்தியிடம் அமலாகத்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
1-3 வகுப்பு மாணவர்கள் எளிய முறையில் கற்க எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ், லியோனி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். திருவள்ளூர் அழிச்சிவாக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இத்திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்
”இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள். அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்! ” என்று முதலமைச்சர் ட்வீட்
கோடைவிடுமுறை முடிந்து 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் இன்று முதலே பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது