Advertisment

ஸ்டாலின் பாராட்டினார்... அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள்: கண்ணீர் விடும் ஜாக்சன் ஹெர்பி

Photographer Jackson herby video complains officials boycott him: வேலம்மாள் பாட்டியை புகைப்படம் எடுத்து பிரபலமான ஜாக்சன் ஹெர்பி; அதிகாரிகள் வேலை செய்ய விடாமல் தடுப்பாக புகார் கூறியுள்ளார்

author-image
WebDesk
New Update
ஸ்டாலின் பாராட்டினார்... அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள்: கண்ணீர் விடும் ஜாக்சன் ஹெர்பி

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பாராட்டுப் பெற்ற நாகர்கோவிலைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி, அதிகாரிகள் அரசு நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்பதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி. இவர் ஒரு தினப் பத்திரிக்கையில் வேலை பார்த்து வந்தார். இவர் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலான நிலையில் அதனை தமிழக முதல்வர் ஸ்டாலினும் பாராட்டி இருந்தார்.

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தின் போது, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் என்கிற ஏழை மூதாட்டி, ரூ.2 ஆயிரம் பணமும் மளிகைப் பொருட்களும் வாங்கிய மகிழ்ச்சி பிரவாகத்தில் சிரித்த சிரிப்பு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை ஜாக்சன் ஹெர்பி எடுத்திருந்தார். இதனை ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதாக வைரலாக்கி இருந்தனர்.

ஜாக்சன் இதுபோல பல்வேறு பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகளின் போது துணிச்சலாக செயல்பட்டு புகைப்படம் எடுக்க கூடியவர். ஒக்கி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியபோது இவர் எடுத்த புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்திருந்தபோது பாதிப்பின் தீவிரத்தை விளக்க வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களில் இவர் எடுத்த படங்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன.

இந்த கொரானா பெருந்தொற்றுக் காலத்திலும் ஜாக்சன் ஹெர்பி துணிவுடன் கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை எப்படி மயானத்தில் எரிக்கிறார்கள் என்று கவச உடை அணிந்துக் கொண்டு  புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார். கொரோனா நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கொரோனா வார்டிற்கு உள்ளே சென்று அதையும் புகைப்படங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்தார். மேலும், கொரோனா தொற்று பரிசோதனை எப்படி ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது என்பதையும் புகைப்படம் மூலம் வெளிக் காட்டினார்.

இந்த நிலையில், ஜாக்சன் ஹெர்பி கன்னியாகுமரி மாவட்ட செய்தி துறையினர், தன்னை அரசு நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்பதாகவும், வேலை செய்யவிடாமல் தடுப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜாக்சன் ஹெர்பி வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம், நான் தான் வேலம்மாள் பாட்டியை போட்டோ எடுத்த ஜாக்சன் ஹெர்பி, நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தினப் பத்திரிக்கையில் வேலை பார்த்து வந்தேன், அப்போது தான் வேலம்மாள் பாட்டியை போட்டோ எடுத்தேன், இது போல நிறைய விஷயங்களைப் பற்றி நான் போட்டோ எடுத்திருக்கேன், இந்த புகைப்படம் வெளிவந்து பெரிய அளவில் பேசப்பட்டதால், இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை போட்டோ எடுக்க கூடாது என்று, கன்னியாகுமரி மாவட்ட செய்தி துறையிலிருந்து எனக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது, நான் வேலை பார்த்து வந்த பத்திரிக்கையிலிருந்தும் என்னை வேலையை விட்டு அனுப்பிட்டாங்க என்று கூறியுள்ளார்.

மேலும், இது மாதிரி நல்ல புகைப்படங்களை நிறைய எடுத்திருக்கேன், எனக்கு தொடர்ந்து வேலை செய்யனும் என்று ஆசை, ஆனால் வேலை செய்ய விட மாட்டேங்கிறாங்க, அரசு நிகழ்ச்சிகளை போட்டோ எடுக்க கூடாது என்பது மட்டுமல்ல பத்திரிக்கை துறையிலேயே வேலை செய்ய கூடாதுனு பிரச்சனை கொடுக்குறாங்க, எனக்கு வாழ்க்கையில் நல்ல வேலை செய்து பெரிசா சாதிக்கனும் என்று ஆசை, ஆனா இங்க விட மாட்டேங்குறாங்க, என ஜாக்சன் வருத்தத்துடன் பேசியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment