தொடர் போராட்டங்கள் மூலமாக தமிழகத்தில் குழப்பம் உருவாக்க சதி : எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தொடர் போராட்டங்கள் மூலமாக தமிழகத்தில் குழப்பம் உருவாக்க சதி நடப்பதாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தொடர் போராட்டங்கள் மூலமாக தமிழகத்தில் குழப்பம் உருவாக்க சதி நடப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக அரசு சார்பில் மாவட்டம் வாரியாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்று வருகிறார்கள். அந்த வகையில் நாமக்கல்லில் இன்று (செப். 17) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொண்டு, நாமக்கல் மாவட்டம் தொடர்பான பல்வேறு அரசு திட்டப்பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது..

‘சாதாரணத் தொண்டனும் உயர் பதவிக்கு வர முடிகிற இயக்கம் அதிமுக. ஆனால் திமுக.வில் வாரிசுகள்தான் உயர் பதவிக்கு வர முடியும். சில எட்டப்பர்கள் இந்த இயக்கத்தையும் ஆட்சியையும் அழித்துவிட கனவு காண்கிறார்கள். இந்த இயக்கத் தொண்டனின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அது நடக்காது.

ஏனென்றால், இந்த இயக்கம் தொண்டர்களை நம்பி செயல்படும் இயக்கம்! அவர்களோ திமுக.வை நம்பியிருக்கிறார்கள். எம்ஜிஆர் யாரை தீயசக்தி என அடையாளம் காட்டினாரோ, அவர்களுடன் இணைந்து இந்த ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இயக்கத்தின் மீது பற்று, பாசம் இருக்காது. அதனால்தான் அம்மாவே அவரை நீக்கி வைத்திருந்தார்.’ என டிடிவி.தினகரன் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக அவரைத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி, அடுத்து திமுக மீது ‘அட்டாக்’கை திருப்பினார்.

‘இந்த ஆட்சி பொறுப்பேற்றபோதே, ‘இது எத்தனை நாளைக்கு நீடிக்கும்?’ என சிலர் பேசினார்கள். ‘பட்ஜெட் வரை தாங்குமா?’ என கூறினார்கள். பிறகு மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்களா? என கேள்வி எழுப்பினார்கள். அனைத்தையும் கடந்து இந்த ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்போது, ‘இது மோசமான ஆட்சி’ என அவர்கள் விமர்சிக்கிறார்கள். இந்த ஆட்சியில் என்ன குறை கண்டீர்கள்? எனக்கு முன்பு இங்கு பேசிய உங்கள் மாவட்ட அமைச்சர் தங்கமணி, அமைச்சர் சரோஜா ஆகியோர் கூறியதைப் போல, விவசாயிகள் பயன்பெறும் அற்புதமான குடி மராமத்து திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம். 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 1519 ஏரிகளில் மக்களே வண்டல் மணலை அள்ளிக் கொள்ளலாம் என அறிவித்ததால், விவசாயிகள் அந்த மண்ணை எருவாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏரிகள் தூர்வாரப்பட்டு, இப்போது மழையில் நிரம்பி வருகின்றன.

எனவே இந்த அரசு மீது குறைகளை தேடித் தேடி பார்க்கிறார்கள். தொடர்ந்து போராட்டங்களை அறிவித்து குழப்பங்களை உருவாக்க சதி செய்கிறார்கள். இது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் நடக்கும் ஆட்சி. இந்த ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறவர்களை ஆண்டவன் பார்த்துக் கொள்வார். ஆண்டவன் என கூறுவது, அம்மாவே பார்த்துக் கொள்வார் என்பதுதான்.

நாங்கள் டெல்லிக்கு கூஜா தூக்குவதாகவும், அடிமை என்றும் விமர்சிக்கிறார்கள். நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். அதன் மூலமாக தமிழகத்திற்கு தேவையான திட்டங்களையும் நிதியையும் பெறுகிறோம். திமுக 15 ஆண்டுகளுக்கும் மேல் மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது காவிரி பிரச்னையை பேசினார்களா? பாலாறு பற்றி கவலைப்பட்டார்களா? அவர்கள் குடும்பத்தின் வளத்தை பெருக்குவதில்தான் கவனம் செலுத்தினர்.

எங்கள் இயக்கத்திற்கு மத்தியில் அதிகாரத்தில் அமரும் வாய்ப்பு அமையவில்லை. அப்படி வாய்ப்பு அமைந்திருந்தால், தமிழகத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியிருப்போம். ஆனாலும் முடிந்த அளவுக்கு எங்களால் ஆன திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்’ என பேசினார் எடப்பாடி பழனிசாமி.

அரசு விழாவில் டிடிவி.தினகரன் மற்றும் திமுக மீது எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

×Close
×Close