‘காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை கூட்டணி இல்லை’ ஞாபகம் இருக்கிறதா மருத்துவரே?

மருத்துவர் ராமதாஸ் என்ன சொல்லப் போகிறார்? ஒருவேளை அவர் அறிக்கைப் படி, சூரியன் மேற்கே உதிக்க ஆரம்பிக்கிறதா? பார்க்கலாம்.

‘காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை அதிமுக, திமுக.வுடன் கூட்டணி இல்லை’ என்கிற வாசகம் ஞாபகம் இருக்கிறதா மருத்துவரே? அதை நினைவுபடுத்தும் ஒரு தொகுப்பு இது….

தேர்தலுக்கு தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளை மாற்றுவது அரசியல் கட்சிகளுக்கு புதிதில்லை. இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.

ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சி, தனது நிலைப்பாடுகளை அழுத்தம் திருத்தமாக அறிவிப்பதும், பின்னர் அதே நிலைப்பாடுகளை மாற்றுவதும் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ‘எனது குடும்பத்தில் யாரும் கட்சிப் பதவிக்கு வர மாட்டார்கள், வாய்ப்பு கிடைத்தால் தலித் ஒருவரையே முதல்வர் ஆக்குவோம்..’ உள்ளிட்ட சில வாக்குறுதிகள் ஆரம்பத்தில் டாக்டர் ராமதாஸால் முன்வைக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டவை!

அதேபோல திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பேசி வந்ததும் இனி பழங்கதை ஆகிவிடும் போல! பிப்ரவரி 4-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, ‘கூட்டணி குறித்து திமுக, அதிமுக.விடம் பேசி வருகிறோம்’ என கூறியிருப்பது பெரும் சர்ச்சை ஆகியிருக்கிறது.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்கிற ராமதாஸின் நிலைப்பாடு என்ன ஆனது? என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, எதிரெதிர் நிலைப்பாடுகளைக் கொண்ட திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் பேசி வருவதாக அன்புமணி பேசியதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்தத் தருணத்தில் கடந்த 2017, ஜூன் 4-ம் தேதி டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையை வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

டாக்டர் ராமதாஸின் அறிக்கை வருமாறு: ‘திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும், எனது நண்பருமான கலைஞரின் 94-வது பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவை நுழைவு வைரவிழாவையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று முன்நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அந்த அறிக்கையை எனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டிருந்தேன். எனது முகநூல் பக்கத்தில் இதுதொடர்பாக பின்னூட்டம் இட்டிருந்தவர்களில் பலர் அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து கலைஞருக்கு வாழ்த்து கூறியதற்காக நன்றி தெரிவித்திருந்தனர்.

இன்னும் பலர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அக்கட்சியுடன் எந்தக்காலத்திலும் கூட்டணி அமைத்துக் கொள்ளக் கூடாது என்று அன்பாக எச்சரிக்கை விட்டிருந்தனர். அந்த இளைஞர்களுக்கு இதன் மூலம் விளக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்.

தலைவர்களின் பிறந்தநாள்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது அரசியல் நாகரிகங்களில் ஒன்றாகும். வட மாநிலங்களில் அரசியல்ரீதியாக எதிரெதிர் அணிகளில் இருப்பவர்கள் கூட பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஒன்று கூடுவதும், அரசியல் தவிர்த்து பிற இடங்களில் நண்பர்களாக பழகுவதும் வாடிக்கையாகும். அத்தகைய நாகரிக கலாச்சாரத்தை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும்.

ஆனால், எதிர் அணியில் உள்ள தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பது கூட அரசியலாக்கப்படுவது தான் தமிழகத்தின் துரதிருஷ்டம் ஆகும். திமுகவின் முன்னாள் பொருளாளரும், எனது இனிய நண்பருமான ஆற்காடு வீராசாமி சில வாரங்களுக்கு முன் முத்துவிழா கொண்டாடினார். திமுக தலைமையகமான அறிவாலய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற அவ்விழாவில் நான் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வீராசாமியின் புதல்வரும், மருத்துவருமான வீ. கலாநிதி குடும்பத்துடன் என்னை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அதையேற்று அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மனம் நிறைய விரும்பினேன். ஆனால், திமுக தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் அக்கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டால் அதற்கு அரசியல் சாயம் பூசப்படும் என்பதற்காகவே பங்கேற்பதைத் தவிர்த்தேன். அவ்விழாவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அதன்பின்னர் நண்பர் ஆற்காடு வீராசாமியை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்பதற்காக கடந்த ஒன்றாம் தேதி காலை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லம் சென்றேன். அவரும், குடும்பத்தினரும் அன்புடன் வரவேற்றனர்.

தொடர்ந்து ஆற்காடு வீராசாமியுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது‘‘ உங்களுடனான இன்றைய சந்திப்பைக்கூட ஊடகங்கள் வேறு விதமாகத் தான் வர்ணிக்கும். காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை திமுகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணி இல்லை என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்திருக்கிறேன். கட்சி என்பது வேறு, நட்பு என்பது வேறு. அதிமுகவுடனும், திமுகவுடனும் எந்தக்காலத்திலும் கூட்டணி இல்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவு ஆகும். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் கூட இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற எங்களின் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். ஆனாலும், அரசியலைக் கடந்தது நமது நட்பு என்பதால் தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்’’ என்று கூறினேன்.

அதை நண்பர் ஆற்காடு வீராசாமி முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பின் போது ஆற்காட்டாரின் புதல்வர் வீ.கலாநிதி, பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர், செய்தித்தொடர்பாளர் பாலு, சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் வி.ஜே.பாண்டியன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதன்மூலம் நமது இளைஞர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், நமது கொள்கையில் நாம் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் அரசியல் நாகரிகம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் அரசியல் நாகரிகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அரசியல் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை நேரிலும், அறிக்கை வாயிலாகவும் தெரிவிக்கிறோம்.

இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பு இல்லை. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் மற்ற யாரையும் விட நான் தெளிவாக இருக்கிறேன். இந்த விஷயத்தில் யாருக்கும் மனத்தடுமாற்றம் தேவையில்லை. தெளிவாக இருங்கள். அதிமுக, திமுக அல்லாத அரசை தமிழகத்தில் அமைத்தே தீருவது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மிக மிக மிக உறுதியாக உள்ளது.’ இவ்வாறு கூறியிருந்தார் டாக்டர் ராமதாஸ்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் கூட இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: ராமதாஸ்

இப்போது திமுக, அதிமுக.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக 2019, பிப்ரவரி 4 அன்று அன்புமணி கூறியதாக வெளிவரும் தகவல்கள் நிஜம்தானா? மருத்துவர் ராமதாஸ் என்ன சொல்லப் போகிறார்? ஒருவேளை அவர் அறிக்கைப் படி, சூரியன் மேற்கே உதிக்க ஆரம்பிக்கிறதா? பார்க்கலாம்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close