Advertisment

20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை

Ramadoss announce huge protest for vanniyar separate reservation : போராட்டம் தொடர்பாக எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் அதை சந்திக்க நாம் தயாராக உள்ளோம்

author-image
WebDesk
New Update
20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை

வன்னியர்கள் அனைத்துக் கட்சி ஆட்சிகளாலும் தொடர்ந்து திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றனர்

Advertisment

வன்னியர்கள் 20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம் மிகக்

கடுமையாக இருக்கும்: எந்த விளைவையும் சந்திக்கத் தயார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்படவிருக்கும் போராட்டத்தை எந்த வடிவத்தில் நடத்துவது? எந்த தேதியில் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி & வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் இன்று (நவம்பர், 22) இணையவழியில் நடைபெற்றது.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி முன்னிலையில் நடைபெற்ற கூட்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அரங்க.வேலு, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆற்றிய உரையில் :

போராட்டம் என்பது நமக்கு லட்டு தின்பதைப் போன்றது. 1987&ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஒரு வாரத்திற்கு தொடர் சாலைமறியல் என்ற மிகக்கடுமையான போராட்டத்தை நடத்தினோம். இப்போது அதைவிட மிகக்கடுமையான போராட்டங்களை நடத்த தயாராக இருக்கிறோம் என்று இந்தக் கால இளைஞர்கள் எனக்கு சவால் விடும் வகையில் கூறுகின்றனர். இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காகத் தான் இங்கு கூடியுள்ளோம்.

வன்னியர்கள் தமிழ்நாட்டில் உழைக்கும் சமுதாயமாக, உணவு படைக்கும் சமுதாயமாக, ஓட்டுப்போடும் சமுதாயமாக, 25%&க்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட சமுதாயமாக உள்ளனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டனர். இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சியினரும் நம்மை ஏமாற்றினார்கள். முதன்முதலில் காங்கிரஸ் கட்சி நம்மை ஏமாற்றியது. 1952&ஆம் ஆண்டு தேர்தலில் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் தலைமையிலான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 4 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மாணிக்கவேலு நாயகர் தலைமையிலான காமன்வீல் கட்சி 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 3 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், இந்த இரு கட்சிகளையும் இணைத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அப்போது அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையாமல் கூட்டணி ஆட்சி அமைக்க வலியுறுத்தி இருந்தாலோ, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தாலோ வன்னியர் சமுதாயம் தான் இன்று வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டு இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் இரு தலைவர்களும் ஏமாந்தனர். அவர்களை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திட்டமிட்டு ஏமாற்றினார்கள்.

அடுத்ததாக திமுக தலைவர் கலைஞர் மிகவும் சாமர்த்தியமாக திட்டம் வகுத்து ஏமாற்றினார். வன்னியர்கள் கல்வி கற்கக் கூடாது; வேலைக்கு செல்லக் கூடாது என்று திட்டமிட்டு தான் ஏமாற்றினார். எம்.ஜி.ஆரும் நம்மை ஏமாற்றினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் நம்மை ஏமாற்றினர்.

1950&களில் வன்னியர்களில் ஊருக்கு ஒருவர் கூட படித்திருக்க மாட்டார்கள். கடிதம் வந்தால் மற்றவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்வார்கள். தந்தி வந்தால் அடுத்த ஊரில் உள்ள அய்யரிடம் கொடுத்து படிக்கச் சொல்வார்கள். பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றால் வண்டி சக்கரத்தில் உள்ள கருப்பு மையை எடுத்து கைரேகை வைப்பார்கள். அந்த நிலையில் தான் வன்னியர்கள் அப்போது இருந்தார்கள். அதன்பிறகு இந்த ராமதாஸ் உருவெடுத்து போராட்டம் நடத்தி பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பிரித்து 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்? இப்போது இருப்பதை விட மிகவும் மோசமான நிலைக்கு வன்னியர் சமுதாயம் சென்றிருக்கும்.

கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு 1969&ஆம் ஆண்டில் சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையம் 1970&ஆம் ஆண்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 33% ஆக உயர்த்த வேண்டும். அதை இரண்டாக பிரித்து வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், அந்த பரிந்துரையை கலைஞர் குப்பைத் தொட்டியில் போட்டார். அதேநேரத்தில் ஆணையம் பரிந்துரை செய்யாமலேயே 15 உயர்சாதிகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் கலைஞர் சேர்த்தார். இது எவ்வளவ அநியாயம்?

காமராசர் ஆட்சியில் வன்னியர்கள் உள்ளிட்ட 38 சமுதாயங்களை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்று ஓர் பிரிவு உருவாக்கப்பட்டது. அந்த பிரிவுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஆனால், 92 எம்.இ.ஆர் என்ற பிரிவின்படி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 1972&ஆம் ஆண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவையே கலைஞர் நீக்கிவிட்டார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுத்த கலைஞருக்கு கல்வி உதவித்தொகை பெற்று வன்னியர்கள் படித்து முன்னேறுவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அதன்பின்னர் வந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அம்பாசங்கர் ஆணையம் அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 34 சமுதாயங்கள் இட ஒதுக்கீட்டை அளவுக்கு அதிகமாக அனுபவித்து விட்டனர். அதனால் அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கி, பொதுப்போட்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், அதை எம்.ஜி.ஆர் அரசு செய்யவில்லை. மாறாக, உயர்சாதி பட்டியலில் உள்ள 29 சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார்.

கலைஞர் 15 உயர்சாதிகளையும், எம்.ஜி.ஆர் 29 உயர்சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர். அவர்களுடன் வன்னியர்களால் போட்டியிட முடியாது. அதனால் தான் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால், பயனில்லை.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு? என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி நான் கோரியிருந்தேன். ஆனால், அந்த விவரங்களை வழங்க முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுத்து விட்டது. இதுதொடர்பான விவரங்களைக் கூறினால் ராமதாஸ் போராடத் தொடங்கிவிடுவான் என்ற அச்சம் தான் இதற்கெல்லாம் காரணம் ஆகும். இது தொடர்பான விவரங்களை தமிழக அரசு தராவிட்டாலும் நாங்கள் போராடுவோம்.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நான், நமது கட்சித் தலைவர் ஜி.கே.மணி, மருத்துவர் அன்புமணி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அதன்பின் தமிழக முதலமைச்சருக்கு பலமுறை கடிதம் எழுதினோம். ஆனால், முதலமைச்சரிடமிருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. கூட்டணி கட்சியாக இருந்தாலும் நமது கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார்கள். இதற்குக் காரணம் வன்னியர்கள் குடிக்கும் சாதியாகவும், மற்றவர்களுக்கு உழைக்கும் சாதியாகவும் நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆந்திராவில் 1970-ம் ஆண்டு முதல் தொகுப்பு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இப்போது அங்கு பிற்படுத்தப்பட்ட வகுபினருக்கான 29 விழுக்காடு இடஒதுக்கீடு 6 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது. கேரளத்தில் 1966-ம் ஆண்டிலிருந்து தொகுப்பு இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது. அங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 40 விழுக்காடு இடஒதுக்கீடு 8 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது.ஈழவர்களுக்கு 14 விழுக்காடு, இஸ்லாமியர்களுக்கு 12 விழுக்காடு, லத்தீன் கிரிஸ்தவர்களுக்கு 4 விழுக்காடு, நாடார்களுக்கு 2 விழுக்காடு, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்களுக்கு 1 விழுக்காடு, தீரவர்களுக்கு 1 விழுக்காடு, விஸ்வகர்மாக்களுக்கு 3 விழுக்காடு என இடஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஒரு காலகட்டத்தில் பார்த்தாலே தீட்டு; நாயர்களும் நம்பூதிரிகளும் 32 அடி தள்ளி நின்றுதான் ஈழவர்களை பார்க்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று மத்திய, மாநில அரசு பணிகளிலும் ஈழவர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் ஈழவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதுதான்.

அதேபோல் நாம் 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி இப்போது போராட்டம் நடத்த உள்ளோம். மக்கள் தொகை அடிப்படையில் தான் நாம் இடஒதுக்கீடு கோருகிறோம். கடந்த 40 ஆண்டுகளாகவே இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். ஆனால் அதை ஏற்க ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர்.

கர்நாடகத்தில் 1962-ம் ஆண்டில் இருந்தே தொகுப்பு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அந்த மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இப்போது 32% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இட ஒதுக்கீடு 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை தமிழகத்தை இப்போது ஆளும் அதிமுகவும், இதற்கு முன் ஆட்சி செய்த திமுகவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் கூறுகிறேன்.

இடஒதுக்கீடு கோரி கடந்த 1989-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞரை சந்தித்து பேசினேன். அப்போது மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போன்று   தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை 6 பிரிவுகளாக பிரித்து வழங்க வலியுறுத்தினேன். ஆனால் தி.மு.க தலைவர் கலைஞர் அந்த கோரிக்கையையும் ஏற்கவில்லை.

வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டு இன்றைய இளைஞர்கள் கொதித்துபோய் இருக்கிறார்கள். அய்யாவையே ஏமாற்றுகிறார்களா என்று ஆவேசமடைந்துள்ளனர். அவர்களை திரட்டிதான் மிகப்பெரிய போராட்டத்தை நாம் நடத்த இருக்கிறோம்.

குஜராத் மாநிலத்தில் படேல் சமுதாயத்தினர் போராட்டம் நடத்தியது போன்று, குஜ்ஜார் சமுதாயத்தினர் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தியது போன்று நமது போராட்டமும் மிக கடுமையாக இருக்கும்.

நாம் போராட தொடங்கிய 4 நாட்களில் நமது கோரிக்கையை ஏற்று கொள்வதாக அரசு அறிவிக்க வேண்டும். அந்த அளவுக்கு நமது போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும். இது தொடர்பாக எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் அதை சந்திக்க நாம் தயாராக உள்ளோம்.

பாட்டாளி மக்கள் கட்சி தான் என்றில்லாமல் பிற கட்சிகளில் உள்ள வன்னியர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் போராடி பெற்று தர இருக்கும் இடஒதுக்கீட்டால் உங்கள் குழந்தைகளும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பயனடைவார்கள்.

நாம் அனைத்து வகைகளிலும் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் அதனால் தான் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தை நடத்த உள்ளோம். இது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம். நல்ல பதில் கிடைக்காவிட்டால் நாம் நடத்தும் போராட்டம் மிக கடுமையாக இருக்கும்.

ஆட்சியாளர்களுக்கு இறுதியாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்கள் கேட்பீர்களோ அல்லது கேட்க மாட்டீர்களோ அது உங்கள் விருப்பம். ஆனால் 20 விழுக்காடு இடஒதுக்கீடு எங்களுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பதவிகளில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அந்த கோரிக்கை இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. மொத்தம் 15 உறுப்பினர் பதவிகளில் 3 உறுப்பினர் பதவிகளை தவிர மீதம் உள்ளவை காலியாக உள்ளன. அவற்றில் வன்னியர்களை நியமிக்கும்படி முதலமைச்சருக்கு கடிதம் எழுதினேன். 5 பேர் கொண்ட பட்டியலையும் நான் முதலமைச்சருக்கு அனுப்பியிருந்தேன். அவர்களில் இருவருக்காவது உறுப்பினர் பதவி வழங்கி இருக்கலாம். ஆனால், அதை செய்வதற்குக் கூட அரசு தயாராக இல்லை.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கினால் தீட்டு ஆகிவிடுமா? வன்னியர்களுக்கு எதிரான அரசின் போக்கை கண்டித்து வன்னிய இளைஞர்கள் கொதித்துபோய் உள்ளனர்.

இடஒதுக்கீடு போராட்டத்தில் எந்த தியாகத்தையும் செய்ய அவர்கள் தயாராக உள்ளனர். போராட்ட களத்திற்கு செல்லும் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். அதேபோல் இந்த போராட்டத்தில் பங்கேற்கவிருக்கும் என்னையும் நீங்கள் வாழ்த்த வேண்டும்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தாழ்மையுடன் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்குங்கள். கலைஞர் எங்களுக்கு அழுகிய கனியை கொடுத்தார். நீங்கள் நல்ல சேலத்து மாங்கனியை கொடுங்கள் என்று கேட்கிறோம்.

வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற கோரிக்கை மிகவும் குறைவுதான். மக்கள் தொகைப்படி பார்த்தால் எங்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனாலும் தமிழக முதலமைச்சராகிய நீங்கள் முதலில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு தாருங்கள். மீதமுள்ளதை நாங்கள் பிறகு பார்த்துகொள்கிறோம்.

வன்னியர் சமுதாயத்தின் போராட்டத்தை, நாங்கள் கேட்கும் இடஒதுக்கீட்டைக் கொடுத்து முடிவுக்கு கொண்டு வருவது முதல்வராகிய உங்கள் கைகளில் தான் உள்ளது".

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ்  உரையாற்றினார்.

Anbumani Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment