குழந்தைகள் திருமண முறையை ஒழிக்க ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தேவை: ராமதாஸ்

குழந்தைத் திருமண முறையின் பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

குழந்தைகள் திருமண முறையால் பாதிக்கப்பட்ட ஆனந்தி உள்ளிட்ட பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்வுக்கு, சிறுவர் திருமணத் தடை சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை விட கூடுதலான உதவிகளை வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் பரிதாபமான நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி வேதனையளிப்பதாக உள்ளது. குழந்தைகள் திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை அச்செய்தி ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் உணர்த்தியுள்ளது.

கிருட்டிணகிரி மாவட்டம் தளி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட என்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்ற கூலித் தொழிலாளியின் 12 வயது மகள் ஆனந்திக்கு இரு ஆண்டுகளுக்கும் முன் அவரது உறவினரான 20 வயது காவேரியை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். அடுத்த ஓராண்டில் காவேரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்த சில மாதங்களில் ஆனந்திக்கு குழந்தை பிறந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன் புகுந்த வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். அவரால் புகுந்த வீட்டிற்கும் செல்ல முடியவில்லை. இதனால் 14 வயதில் ஆதரவற்றவராகிவிட்ட ஆனந்தி, அவரது 6 மாதக் கைக்குழந்தையுடன் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

ஆனந்தி பள்ளிக்கு சென்று படிக்க வேண்டிய நிலையில் கைக்குழந்தையுடன், வயிற்றுப்பிழைப்புக்காக கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆனந்தியின் ஆறு மாத குழந்தை ஊட்டச்சத்துடன் வளர வேண்டிய நிலையில், இன்னொரு குழந்தையான தாய் வேலை செய்யும் இடத்தில் வெயிலில் வாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

14 வயது ஆனந்தியோ, அவரது ஆறு மாத குழந்தையோ செய்யாத தவறுக்காக கொடுமையான தண்டனையை அனுபவிக்கிறார்கள். ஆனந்திக்கு நடந்த குழந்தைத் திருமணத்தைத் தடுக்கத் தவறிய அரசு நிர்வாகமோ, குழந்தைத் தாயான ஆனந்திக்கு எந்த உதவியும் செய்யாமல் அவர் அனுபவித்து வரும் கொடியத் துயரங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடந்து வருகின்றன. சட்டத்தின்படியும், மருத்துவ அறிவியலின்படியும் இது தவறு என்றாலும் இதற்காக குழந்தை திருமணம் செய்து வைக்கப்படும் மணமகள்கள், அவர்களின் உட்பட யாரையும் குற்றஞ்சாட்ட முடியாது என்பது தான் எதார்த்தமாகும்.

மாறாக, அத்தனை அவலங்களுக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். குழந்தை திருமணம் செய்து வைப்பதற்கு ஒவ்வொரு பெற்றோருக்கு சில நியாயங்கள் உள்ளன. அவற்றைத் தவறு என்றோ, குற்றம் என்றோ எவரும் கூற முடியாது என்பது தான் உண்மை.

தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் வாழும் பழங்குடியின மக்களும், பிற சமுதாய மக்களும் பொருளாதாரத்தில் மிகமிக பின்தங்கியவர்களாக உள்ளனர். உள்ளூரில் அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில், குடும்பத்தில் உள்ள தாயும், தந்தையும் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ செல்லும்போது தங்களின் பெண் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வதோ அல்லது வீட்டில் தனித்து விட்டுச் செல்வதோ சாத்தியமில்லை. குழந்தைத் திருமணங்களுக்கு இது தான் முக்கியக் காரணம் ஆகும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் குழந்தைத் திருமணத்தை ஒழிப்பது சாத்தியமற்றது.

குழந்தைத் திருமண முறையின் பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. எந்தப் பெற்றோரும் தங்களின் குழந்தைகளுக்கு விரும்பி திருமணம் செய்து வைப்பதில்லை.

சூழ்நிலைகள் தான் அவர்களை அத்தகைய கட்டாயத்துக்குத் தள்ளுகின்றன. குழந்தை திருமணங்களுக்கு முடிவு கட்ட வேண்டுமானால், அதற்கான காரணங்கள் என்னவென்பதை அறிந்து அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

இம்மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் வேலை தேடி வெளியூர் செல்வது தான் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்பதால் தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டங்கள் மட்டுமின்றி இவ்வழக்கம் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். முழு அளவில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் வரை மாணவிகளுக்கான உண்டு உறைவிட பள்ளிகளை அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்த வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, குழந்தைகள் திருமண முறையால் பாதிக்கப்பட்ட ஆனந்தி உள்ளிட்ட பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்வுக்கு, சிறுவர் திருமணத் தடை சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை விட கூடுதலான உதவிகளை வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close