Advertisment

தமிழர் நாகரிக பெருமையை குலைக்க சதி: கீழடி அகழாய்வை முடிக்கக் கூடாது! - ராமதாஸ்

தமிழர் நாகரிகத்தின் பெருமையை சிதைப்பதற்கான முயற்சியை அனுமதிக்கக்கூடாது. கீழடியில் நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட அகழாய்வை நிறைவு செய்ய அனுமதிக்கக்கூடாது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழர் நாகரிக பெருமையை குலைக்க  சதி: கீழடி அகழாய்வை முடிக்கக் கூடாது! - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை அருகே கீழடியில் தொல்லியல் துறை மேற்கொண்டு வந்த மூன்றாம் கட்ட அகழாய்வு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் தொடர்ச்சியோ, அதனுடன் தொடர்புடைய கூறுகளோ கிடைக்கவில்லை என்றும் அதன் பொறுப்பாளர் ஸ்ரீராமன் கூறியுள்ளார். முந்தைய ஆய்வுகளில் நிறுவப்பட்ட தமிழர் நாகரிக பெருமையை சிதைக்கும் சதியாகவே இது தோன்றுகிறது.

Advertisment

கீழடியில் முதல் 2 கட்ட அகழாய்வுகளை கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் தான் நடத்தினர். அவற்றில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வில், சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், அங்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்துப் பார்க்கும்போது அங்கு தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும்; அவற்றில் இருந்து தான் அப்பொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. சங்க காலத்தில் நகர நாகரிகம் செழித்திருந்தது என்பதையும், நாம் நினைப்பதை விட தமிழ் நாகரிகம் தொன்மையானது என்பதையும் கீழடியில் கிடைத்த பொருட்கள் உறுதி செய்த நிலையில், அது மூன்றாம் கட்ட ஆய்வில் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்றாம் கட்ட ஆய்வு அதற்கு நேர் எதிராக அமைந்துள்ளது. இதற்குக் காரணம் மத்திய அரசும், அதன் விருப்பப்படி கீழடி அகழ்வாய்வுக்கான பொறுப்பாளர் ஸ்ரீராமனும் செய்த சதி தான்.

கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கட்டுமானங்களின் தொடர்ச்சி எதுவும் கிடைக்காததற்குக் காரணம், அப்படி எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு தவறான இடத்தில் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது தான். கடந்த ஆண்டில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் தொடர்ச்சி தெற்கில் நீண்டிருந்தது. அதைக் கண்டறிய வேண்டும் என்றால், இந்த ஆண்டின் அகழாய்வுகள் தெற்கு திசையில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஸ்ரீராமன் தலைமையிலான குழுவினர் திட்டமிட்டே வடக்குத் திசையில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டதால் தான் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதுமட்டுமின்றி, கடந்த அகழாய்வு ரூ.25 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டது. அதைக் கொண்டு சுமார் 1500 சதுர மீட்டர் பரப்பளவில் 43 குழிகள் தோண்டப்பட்டன. இதற்காக சராசரியாக 80 பேர் பணியாற்றினார்கள். அதன்மூலம் 5300-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், நடப்பாண்டில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், 400 சதுர மீட்டர் பரப்பளவில் 10 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளன. இதனால் 1800 பொருட்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கெல்லாம் மேலாக ஒரு குழி கூட இயற்கை மண்படிமம் வரை தோண்டப்படவில்லை. இத்தகைய சூழலில் வரும் 30&ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிக்கப்படவிருப்பதாக ஸ்ரீராமன் கூறியுள்ளார்.

ஒரு குழி கூட இயற்கை மண்படிமம் வரை தோண்டப்படாத நிலையில், துண்டுச் சுவரில் எடுக்கப்பட்ட கரித்துகள்களை கரிமப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, அவற்றின் கால அளவை நிர்ணயம் செய்யவும் தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. முழுமையாக தோண்டப்படாத குழியில் எடுக்கப்பட்ட கரித்துகள்களை ஆய்வுக்கு உட்படுத்தி தமிழர் நாகரிகம் நகரப்பகுதிகளில் வாழ்ந்த காலத்தை அண்மைக் காலமாக்கிக் காட்ட தொல்லியல் துறை திட்டமிட்டிருக்கிறது. கீழடியில் நேர்மையான முறையில் அகழாய்வு நடந்தால் தமிழர் நாகரிகம் தான் மிகவும் பழமையானது என்பதும், நகர்ப்புற வாழ்க்கை முறையும், தொழிற்சாலைகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வசப்பட்டிருந்தது என்பதும் நிரூபிக்கப்படுவது உறுதி.

அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் அகழாய்வுப் பணியை நடத்தி வந்த கண்காணிப்பாளர் அமர்நாத்தை இடமாற்றம் செய்து விட்டு, ஸ்ரீராமன் என்பவரை மத்திய ஆட்சியாளர்கள் நியமித்தனர். அவரும் எஜமானர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அனைத்து திரிபுகளையும் செய்துள்ளார். தமிழர் நாகரிகத்தின் பெருமையை சிதைப்பதற்கான இந்த முயற்சியை அனுமதிக்கக்கூடாது. கீழடியில் நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட அகழாய்வை நிறைவு செய்ய அனுமதிக்கக்கூடாது. அகழாய்வில் கிடைத்த எந்த பொருளையும் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பக்கூடாது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் இராமகிருஷ்ணனை மீண்டும் கீழடி அகழாய்வுக்கு பொறுப்பாளராக நியமித்து மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை, இரண்டாம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியாக மேற்கொள்ள பணிக்க வேண்டும். இரண்டாம் கட்ட ஆய்வில் கிடைத்தவற்றில் 20 பொருட்களை கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும்.

கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ள நிலையில் அகழ்வாய்வுப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும். அத்துடன், அருங்காட்சியகம் அமைத்தல், கண்டறியப்பட்ட கட்டுமானங்களை பொதுப்பார்வைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகளை மத்திய அரசும், தொல்லியல் துறையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment