Advertisment

சென்னை டு மதுரை; 8 நாள் பிரச்சார பயணம்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் தேதி சென்னையில் இருந்து மதுரை வரை இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
சென்னை டு மதுரை; 8 நாள் பிரச்சார பயணம்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

Advertisment

தமிழ்நாட்டில் தமிழ் மொழி தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு 'தமிழைத் தேடி' என்ற தலைப்பிலான பயணத்தை மேற்கொள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் தேதி சென்னையில் இருந்து மதுரை வரை இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "உலகின் மூத்த மொழியான தமிழின் இனிமை, பழமை, பெருமைகள், சிறப்புகள் ஆகியவை குறித்து மகிழ்ச்சி அடைய ஏராளமான செய்திகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இன்று தமிழின் இருப்பு எவ்வாறு உள்ளது? என்பதை நினைக்கும் போது தான் பெரும் கவலையும், வருத்தமும் வாட்டுகின்றன. தமிழ்நாட்டில் 'எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்' என்பது தான் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் நிலைப்பாடும், எதிர்பார்ப்பும் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் 'எங்கே தமிழ்?' என்பது தான் இன்றைய எதார்த்தம்.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் தமிழைக் கட்டாயப்பாடமாக்க சட்டம் இயற்றி 16 ஆண்டுகள் ஆகியும் கூட தமிழ் இன்னும் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் தவிர பிற பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று 18.09.2014-ஆம் நாளில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்தும் அந்த பள்ளிகளிலும் இன்னும் தமிழ் இல்லை. அனைத்துப் பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை தமிழ் தான் கட்டாயப் பயிற்றுமொழி என்று 23 ஆண்டுகளுக்கு முன் அரசாணை பிறப்பிக்கப்பட்டும் கூட தமிழ் இன்னும் பயிற்றுமொழி ஆகவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட தமிழ் இன்னும் உயர்நீதிமன்ற அலுவல் மொழி ஆகவில்லை. 1956-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாடு அரசின் அரசாணைகளில் முழுமையாக தமிழில் இல்லை. இவ்வாறு தமிழுக்கு தமிழ்நாட்டில் கூட உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததற்கு பல உதாரணங்களை கூறலாம்.

தமிழ்நாட்டில் தமிழ் மொழி தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி, 'தமிழைத் தேடி' என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ஆம் நாள், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடங்கும் இந்த பரப்புரை பயணம் மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி, திண்டுக்கல் வழியாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் வரும் பிப்ரவரி 28-ஆம் நாள் நிறைவடையும்.

தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வித்துறை, கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் எனது இந்த 'தமிழைத் தேடி' பரப்புரை பயணத்தில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்", என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment