Advertisment

போயஸ் கார்டன் ரெய்டால் எந்த பயனும் இல்லை : நெல்லையில் ஸ்டாலின் பேச்சு

போயஸ் கார்டன் ரெய்டால் எந்த பயனும் இல்லை என திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IT raids, dmk, mk stalin, tirunelveli district

போயஸ் கார்டன் ரெய்டால் எந்த பயனும் இல்லை என திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

Advertisment

போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் அண்மையில் நடந்த ரெய்டு குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர், ‘ஏற்கனவே நடந்த ரெய்டுகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சம்பந்தப்பட்ட துறையினர் தெரிவிக்கட்டும். அதன்பிறகு இதில் எனது கருத்தை கூறுகிறேன்’ என தெரிவித்திருந்தார்.

இன்று(நவம்பர் 20) திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் வந்தார். மாவட்ட எல்லையான கரிவலம்வந்தநல்லூரில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் சங்கரன்கோவிலில் முன்னாள் எம்.பி. தங்கவேலு இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசியதாவது:

1967-ம் ஆண்டுக்கு முன்பு இதுபோல சுயமரியாதை திருமணங்கள் நடத்த முடியாது. பேரறிஞர் அண்ணா முதல்வர் ஆனதும் சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என ஆணை பிறப்பித்தார்.

பொதுமக்கள் அதிமுக ஆட்சியை திட்டுவதை விட தி.மு.க.வைதான் அதிகமாக திட்டுகிறார்கள். இந்த ஆட்சியை இன்னும் ஏன் அகற்றாமல் இருக்கிறீர்கள்? என கேட்கின்றனர். தமிழகத்தில் இதுவரை நடந்த வருமான வரி சோதனையில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது ஏன் என்று புரியவில்லை.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதில் எந்த பயனும் இல்லை. அ.தி.மு.க.வை மிரட்டி மதவாத கட்சியான பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. தமிழக மக்கள் துணையுடன் பா.ஜ.க.வால் தமிழகத்தில் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது.

தமிழக மக்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிப்போகிறது. அ.தி.மு.க. ஆட்சியை மிரட்டி தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது. தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை பற்றி சிந்திக்காத ஆட்சியாக தமிழக ஆட்சி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் தி.மு.க. சார்பில் கட்டப்பட்டு இருக்கும் கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு அவர் குற்றாலம் சென்றார். இன்று மாலை 6 மணிக்கு பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் பகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா, முரசொலி பவளவிழா மற்றும் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா நடக்கிறது.

இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், முன்னாள் அமைச்சர்கள் டி.பி.எம். மைதீன்கான், பூங்கோதை ஆலடி அருணா, நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

கூட்டத்தின் போது மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைகிறார்கள். மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அவர் செல்லும் வழியில் கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு உள்ளன. அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபன் இந்த விழாவுக்கு ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.

 

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment