விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பிய நபரை கடத்திய 7 பேர் கைது

மலேசியாவிலிருந்து சென்னை வந்த ஒருவரை விமான நிலையத்தில் வைத்து, கத்தி முனையில் கடத்தி சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் தன்னுடைய ஊரை சேர்ந்த 7 பேரிடம் வியட்நாமில் வேலை வாங்கி தருவதாக கூறி தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் மலேசியாவில் உள்ள முத்து என்பவரிடம் இதுதொடர்பான ஏற்பாடுகளை செய்ய தமிழ்செல்வன் கூறியதாகவும் தெரிகிறது. இதன்படி பணம் அளித்தவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு மலேசியா சென்ற தமிழ்செல்வன் அங்கு சென்று முத்துவை தொடர்பு கொள்ள முயற்சித்த போது முத்துவின் செல்போன் அணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஒருவாரம் மலேசியாவிலேயே தங்கி அனைவரும் முத்துவை தேடியுள்ளனர்.

முத்து கிடைக்காததால், மீண்டும் அந்த 7 பேரையும் திருச்சிக்கு டிக்கெட் எடுத்து அனுப்பிய தமிழ்செல்வன், கடந்த மூன்று மாதங்களாக மலேசியாவிலேயே தங்கி முத்துவை தேடியதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று சென்னை வந்த தமிழ்செல்வனை விமான நிலையத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்கள் விவரம் கேட்டுள்ளனர். ஆனால் மலேசியாவில் எவ்வளவு தேடியும் முத்து கிடைக்கவில்லை என்று அவர் கூறியதால், ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்செல்வனை வலுக்கட்டாயமாக கடத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்செல்வனின் சகோதரர் அளித்த புகாரை தொடர்ந்து பல்லாரம் சாலையில் தமிழ்செல்வனை காரில் கடத்திய 7 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர்.

×Close
×Close