’பிக் பாஸ்’ வீட்டில் தற்கொலை முயற்சி: ஓவியா நேரில் ஆஜராக காவல் துறை சம்மன்

நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி செய்துகொண்டதாக புகார் எழுந்தது தொடர்பாக, நேரில் ஆஜராகுமாறு அவருக்கு காவல் துறையினர் சம்மன் அளித்தனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், பெரும்பாலான பார்வையாளர்களைக் கவர்ந்த நடிகை ஓவியா அந்த வீட்டில் தற்கொலை முயற்சி செய்துகொண்டதாக புகார் எழுந்தது தொடர்பாக, நேரில் ஆஜராகுமாறு அவருக்கு காவல் துறையினர் சம்மன் அளித்தனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 50 நாட்களாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பூந்தமல்லி அருகே இந்நிகழ்ச்சிக்காக பங்களா போன்ற அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் போட்டியாளர்கள் 100 நாட்கள், எந்தவித தொலைத்தொடர்பு சாதனங்களுமின்றி தங்க வேண்டும் என்பது விதிமுறை.

இந்நிலையில், ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளரான நடிகை ஓவியா கடந்த 4-ஆம் தேதி வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்குவது போலவும், மற்ற போட்டியாளர்கள் அவரை காப்பாற்றுவது போலவும் காட்டப்பட்டது.

நிகழ்ச்சியின் சக போட்டியாளரான ஆரவ் என்பவரை ஓவியா காதலிப்பது போலவும், அதற்கு ஆரவ் மறுப்பு தெரிவிப்பது போலவும் ஒளிபரப்பான நிலையில், மன அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மன அழுத்தம் காரணமாக தான் மருத்துவ உதவிகளை நாட வேண்டும் எனக்கூறி நடிகை ஓவியா அந்நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

இதனிடையே, ‘பிக்பாஸ்’ வீட்டில் ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு வழக்கறிஞர் ஒருவர் நாசராத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தனது புகாரில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி நிர்வாகம், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோரின் தூண்டுதல் காரணமாகவே அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதன் மூலம், தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. புள்ளிகளை உயர்த்த முனைந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

“வழக்கறிஞரின் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். ஓவியாவின் தனிச்செயலரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என விளக்கம் அளித்தார்.,”, என நாசராத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகை ஓவியா இந்த புகார் தொடர்பாக காவல் நிலையத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு காவல் துறை சம்மன் அனுப்பினர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close