தொடங்கியது போலியோ சொட்டு மருந்து முகாம்! இலக்கு, 71 லட்சம்!

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்று இரண்டாம் தவணையாக போலியோ சொட்டு மருந்து அளிக்கும் முகாம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம் தவணையாக போலியோ சொட்டு மருந்து அளிக்கும் முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடன்கியது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் முக்கியமான இடங்கள் என 43,051 சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மாலை 5 மணிக்கு இந்த முகாம் நிறைவடையும்.

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது. அதன்மூலம் விடுபட்ட குழந்தைகளுக்கு தனியாக சொட்டு மருந்து வழங்கப்படும்.

இன்றைய நாளில், பயணம் செய்யும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்கள் என 1,652 இடங்களில் சொட்டு மருந்து வழங்கும் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் பணியாளர்கள் மூலம் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close