அரசியலாக்கப்படுகிறதா பொள்ளாச்சி கூட்டு பலாத்கார விவகாரம் ?

வருங்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்க சரியான வகையில் குற்றவாளிகளுக்கு தக்க பாடம் அளிப்பதே சிறந்த தீர்வாக அமையும். 

Pollachi Gang Rape Issue : பொள்ளாச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்தது ஒரு கும்பல். மேலும் அதனை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து, ஆசைக்கு இணங்கவில்லை என்றால் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்துவிடுவோம் என்று மிரட்டியும் நகை மற்றும் பணம் ஆகியவற்றையும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து பெற்றுள்ளனர்.

பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு, வசந்த குமார், பாபு, மற்றும் ரிஷ்வந்த். இவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு இந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த கேடுகெட்ட செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தன் அண்ணனிடம் கூறி இந்த விவகாரத்தை நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்தார்.

வசந்த குமார், பாபு, மற்றும் ரிஷவந்த் ஆகியோரை கைது செய்து விசாரணை என்ற பெயரில் இரண்டு நாட்கள் மட்டும் காவலில் வைத்துவிட்டு, போலிசார் வெளியில் விட்டுவிட்டனர்.

விரைவில் நடவடிக்கை எடுக்கக் கோரும் திமுக

குற்றவாளிகள் மீது முறையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மார்ச் நான்காம் தேதி அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பாக அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஒரு கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது.

இதில் பாஜக, அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சியினர் ஒருவர் கூட பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் மீண்டும் 7ம் தேதி, மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளரை சந்தித்து வழக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், வழக்கு விசாரணையில் பெண் அதிகாரி இருக்க வேண்டும் என்றும் போராட்டம் வலியுறுத்தினர்.

அந்த நிமிடம் வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்தித் துணுக்குகளாக, இரண்டு நிமிட செய்திகளாக பட்டும் படாமல் சென்றுவிட்ட நிகழ்வு தூசிதட்டப்பட்டது. நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் ஒரு வீடியோவை வெளியிட ஒட்டுமொத்த தமிழகமும் அந்த பிரச்சனையை உற்று நோக்க ஆரம்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின், ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதன் பின்பு மீண்டும் அந்த நால்வரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசும் கைது செய்யப்பட்டார். அது வரை மெத்தனமாக இருந்து காவல்த்துறை, முதன் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது.

அதில் கோயம்புத்தூர் எஸ்.பி. பாண்டியராஜன் அவசர அவசரமாக விசாரணை குறித்து குறிப்பிடார். மேலும் இந்த நான்கு நபர்கள் தவிர இந்த பெருங்குற்றத்தில் வேறு யாரும் ஈடுபடவில்லை என்பதையும் உறுதியாக கூறினார்.

அத்துடன் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஸ்மார்ட்போன்களில் நான்கே நான்கு வீடியோக்கள் மட்டுமே இருந்ததாகவும் கூறினார். மேலும் அரசியல்வாதிகளின் தலையீடு இதில் இல்லை என்பதையும் உறுதியாக கூறினார். ஆனால் அதிமுகவின் உறுப்பினராக செயல்பட்டு வந்தவர் பார் நாகராஜன். புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை மிரட்டினார். ஆனால் அவருக்கும் இந்த பாலியல் வன்கொடுமைக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய புகார்களை அவர் மறுத்து வந்தார்.

ஒவ்வொரு வீடியோவாக வெளிவர வெளிவர நான்கு நபர்களுக்கும் மேல் இந்த கொடும்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.  பார் நாகராஜனை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைமையிடம் அறிக்கை வெளியிட்டது. நேற்று பார் நாகராஜனின் அந்தரங்க வீடியோ வெளியாகி, அவர் இதுநாள் கூறி வந்த மறுப்பிற்கும் முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது.

தேர்தல் நடக்கின்ற சமயத்தில், திமுக இந்த பிரச்சனையை பெரிதாக்கி அதன் மூலம் ஆதாயம் அடைகின்றனர் என்று ஒரு தரப்பில் கூறி வருகின்றனர்.

ஆனால் அரசியலாக்கப்படுவதால் தான் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் மறுசாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெரும் தலைவர்களின் தலையீடுகளும் அழுத்தங்களும் இந்த பிரச்சனையில் இருப்பதால் தான், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக சார்பில், கனிமொழி தலைமையில் நேற்று, காவல்த்துறை அனுமதியின்றி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அனுமதியின்றி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்ற காரணத்தால் கனிமொழி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தரப்பின் நிலைப்பாடு என்ன ?

பிரச்சனை வெளியாக ஆரம்பமான நாளிலிருந்தே பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கும் இந்த கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் இதற்கு பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார்.

தன் மீது களங்கம் விளைவிப்பதற்காகவே இது போன்று எதிர்கட்சியினர் சதி செய்து வருவதாக குற்றம் சாட்டினார் துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமன். பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேருக்கும் நான் உறுதுணையாக நான் நிற்பேன் என்றும் அவர் அறிவித்தார்.

ஆனால் தற்போது அமமுகவின் தலைவர் டிடிவி தினகரன்  “அதிமுக மற்றும் திமுகவினருக்கும் இந்த பொள்ளாச்சி விவகாரத்தில் பெரும் பங்கு உள்ளது என்றும், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர், இந்த பிரச்சனைகளுக்கு முடிவு காணப்படும் என்றும், பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை” என்றும் பேட்டி அளித்துள்ளது மேலும் பகீரென்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.

நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இப்பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சரி, இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டு இப்பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சரி, வருங்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்க சரியான வகையில் குற்றவாளிகளுக்கு தக்க பாடம் அளிப்பதே சிறந்த தீர்வாக அமையும்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close