பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி காவல்துறை தனது விசாரணை தொடர்பான ரகசிய அறிக்கையை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையிலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரர் மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு, கடந்த மாதம் 13 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த வழக்குகளில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க கோரி வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரைக் குறிப்பிட்டது, மற்ற பெண்களை புகார் அளிக்காமல் தடுக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். எனவே இந்த புகார் தொடர்பாக நடைபெறும் சிபிஐ விசாரணை உயர்நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு கடந்த 19 தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி நீதிபதி கே.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு, சிபிஐ க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ராமணி, எம்.துரைச்சாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ. டி சார்பில் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு வரும் விசாரணை குறித்த ரகசிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது,
பின்னர் தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக சிபிஐக்கு மாற்றி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இடம் பெற்றிருந்தால், மீண்டும் பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி இரண்டாவது அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சிபிஐ வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வரை சிபிசிஐடி காவல்துறை விசாரிக்கும் என தெரிவித்தார்.
சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு பிறப்பித்த புதிய அரசாணை இன்னும் கிடைக்கப் பெறவில்லை. அரசாணையே கிடைக்கப்பெறாத போது சிபிஐ விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக பதில் அளிப்பது இந்த நிலையில் பொருத்தமற்றது எனவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், புதிய அரசாணையை மனுதாரர் தரப்புக்கு வழங்க நீதிபதிகள் அறிவுறுத்தினார். இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், புது அரசாணை அனைத்து தரப்புக்கும் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை விசாரணை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.