சாரண - சாரணியர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு

சாரணர் - சாரணியர் இயக்க பதவிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு முறையாக நடைபெறவில்லை என அதன் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

சாரணர் – சாரணியர் இயக்க பதவிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தல் முறையாக நடைபெறவில்லை என அதன் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

சாரணர்-சாரணியர் இயக்க தலைவர், துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மெரினா கடற்கரை சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் இந்த வாக்குப்பதிவு நடந்தது. சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.

சாரணர் – சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த பதவிக்கு ஹெச்.ராஜா போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவர் போட்டியிடக் கூடாது என்ற எதிர்ப்பும் கிளம்பியது. இவை அனைத்தையும் மீறி சாரணர் – சாரணியர் இயக்க பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் முடிவுகள் பிற்பகலில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், சாரணர் – சாரணியர் இயக்க தேர்தல் முறையாக நடைபெறவில்லை ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சாரணர், சாரணியர் இயக்கத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. அதனால் இந்த தேர்தலை ஏற்க முடியாது. சாரணர்-சாரணியர் இயக்கத்தில் முறையாக பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. தேசிய தலைமை அலுவலக உத்தரவையும் மீறி இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது என்றார்.

முன்னதாக வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாஜக சேர்ந்த சிலர், தேர்தல் அதிகாரியிடம் சென்று தேர்தலை நடத்தக் கூடாது. விதிகளை மீறி இந்த தேர்தல் நடக்கிறது. முன்கூட்டியே வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தேர்தல் வைத்தது முறையல்ல என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர்.

ஆனால், தேர்தல் விதிமுறைகள் படிதான் வாக்குப்பதிவு தொடங்கி முறையாக நடந்தது என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

×Close
×Close