scorecardresearch

‘நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும்’; தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

‘நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும்’; தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பை கொண்டுவர விரும்புகிறேன்.

* தமிழர் வழியில் செழுமை நிலையை இனி வரும் நாட்களிலும் உயர்த்திப்பிடித்து சிறந்து வாழ்த்திட முன்வருவோம்.

* அறுவடையின் திருநாளான பொங்கல் நம் குடும்பங்களிடையே மகிழ்ச்சி, செழிப்பை திரளாக கொண்டு வருகிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி</strong>

முதல்வர் பழனிசாமி விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழவுத் தொழிலை போற்றும் தை பொங்கல் திருநாளில், மக்கள் புத்தாடை அணிந்து இல்லங்களில் வண்ணக் கோலங்களிட்டு கரும்பு, மஞ்சள், இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, அது பொங்கும்போது, ‘பொங்கலோ, பொங்கல்’ என்று உற்சாகமாக குரலெழுப்பி, இறைவனை வணங்கி, பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள்.

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற மகாகவி பாரதியாரின் பாடலுக்கேற்ப, சிறப்புமிக்க வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காகவும் தமிழ்நாடு அரசு, டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனைக் காத்திட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம், 2020 இயற்றியது. வெள்ளம், வறட்சி, புயல் மற்றும் பூச்சி நோய் போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 9,141 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தந்தது.

பண்ணை அளவில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்குடன் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம், அமெரிக்கன் படைப்புழு தாக்குதலிருந்து மக்காச்சோளப் பயிரினை காக்கும் மேலாண்மை திட்டம், விவசாயிகளுக்கு தரமான விதைகளை உரிய காலத்தில் விநியோகம் செய்வதற்காக, தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், தமிழ்நாட்டில் விளையும் பழங்கள், காய்கறிகள் ஆகிய விளைபொருட்களில் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பினை குறைத்து, மதிப்புக்கூட்டி விவசாயிகள் அதிக வருமானம் பெறும் வகையில் விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம், நுண்ணீர்ப் பாசனத்திற்கு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கும் திட்டம், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை திட்டம்,

சிறு குறு விவசாயிகளை ஊக்குவித்து கூட்டாக சாகுபடிப்பணியினை மேற்கொள்ள ‘கூட்டுபண்ணைய திட்டம்’, அதிகரித்து வரும் பண்ணைப் பணியாளர்களின் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம், தகவல் தொழில்நுட்பம் மூலம் விவசாய பெருமக்களுக்கு வேளாண் தகவல்களை கொண்டு சேர்க்கும் “உழவன்”கைபேசி செயலி, விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கியது, வேளாண் விளைபொருட்கள் வீணாவதைக் குறைப்பதற்கும், பண்ணைப் பொருட்களை மதிப்புக் கூட்டி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் “தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018” வெளியிட்டது, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை கட்டியது போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, உணவு தானியங்கள், பயறு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய்வித்துக்கள் போன்ற இனங்களில் தமிழ்நாடு அதிக உற்பத்தி செய்து சாதனை படைத்ததற்காக, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 5 முறை கிருஷி கர்மான் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாடிட அதிமுக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த இனிய தைப் பொங்கல் திருநாளில், உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும்; மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்; நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, மீங்டும் ஒருமுறை எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். ” என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அன்பிற்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் கழகம் சார்பில், இதயங்கனிந்த “பொங்கல் திருநாள்” நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

“தமிழர் திருநாளில் அனைவருக்கும் பொங்கல் – தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “உலகின் அச்சாணியான உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நன்னாளும் – திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின் தொடக்கமுமான தமிழ்ப் புத்தாண்டும் இணைந்து வரும் தை-1, தமிழர் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பின் சிறப்பையும், அதற்குப் பேருதவியாக இருக்கும் இயற்கையையும், மனிதர்களுக்கு உறுதுணையாக உள்ள உயிரினங்களையும், நன்றியுடன் போற்றுகிற நாளே பொங்கல் நன்னாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப, அனைத்துத் தரப்பு மக்களின் மகிழ்ச்சிக்கான ஜனநாயக விடியலைத் தரும் உதயசூரியன் விரைவில் உதிக்கும்.

விவசாயிகளின் வாழ்வு செழித்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் விவசாயக் கடன் – நகைக் கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என்ற உறுதியினை வழங்குகிறேன். அதுபோலவே மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமையாக உள்ள கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும். இவற்றுக்கான பொறுப்பை தி.மு.கழக அரசு ஏற்கும்.

தமிழ் மக்கள் வாழ்வில் இருள் அகன்று, வளமும் நலமும் வெளிச்சம் பாய்ச்சிடத் தமிழர் திருநாளை வரவேற்று அனைவருக்கும் பொங்கல் – தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளரை வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இருள் விலகி தமிழகத்திற்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழ்ப் பெரும் மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “உயிர்களை வாழ வைக்கும் உணவுத் தானியங்களைத் தன் மேனி சிந்திய வியர்வைத் துளிகளால் விளைவித்துத் தரும் வேளாண் பெருங்குடி மக்கள், தாம் தாயாகப் போற்றும் நிலத்துக்கும், கால்நடைச் செல்வங்கட்கும், நன்றி காட்டும் உன்னதப் பெருவிழாதான் தைப்பொங்கல் திருவிழா ஆகும். இதுவே தமிழர்களின் புத்தாண்டின் முதல் நாளும் ஆகும்.

கோவிட்-19 கொரோனா எனும் கொள்ளை நோய் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்ததோடு, அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையை முடக்கிப் போட்டுவிட்டது. தமிழகத்தைத் தாக்கிய நிவர் புயலால் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் அழிந்துவிட்டன.

நாசகார வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து, விவசாயப் பெருமக்களின் வாழ்வையே நரேந்திர மோடி அரசு சூறையாடிவிட்டது. தமிழ்நாட்டில் வரலாறு காணாத ஊழல் செய்து, அண்ணா தி.மு.க. ஆட்சி தமிழகத்தைப் பாழ்படுத்தி விட்டது. வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றிபெறச் செய்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி அமைய தமிழக மக்கள் தீர்ப்பளிக்க வேண்டுகிறேன்.

மரண இருளில் பரிதவித்துத் துடித்துக் கொண்டு இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், தமிழினப் படுகொலை செய்த சிங்களப் பேயாட்சிக்கு அனைத்துலக மக்கள் மன்றமும், ஐ.நா.வின் மனித உரிமை மன்றமும் நீதி வழங்கிட கூண்டில் நிறுத்தவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் முன்வர வேண்டும்.

இருள் விலகி தமிழகத்திற்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழ்ப் பெரும் மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்</strong>

“தைத்திருநாளும், தமிழ் புத்தாண்டும் தமிழர் வாழ்வில் ஒளியேற்றட்டும்” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “தமிழர்களின் தனிப்பெரும் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் மகிழ்வுடன் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளுக்கேற்ப தமிழர்களின் பெருமைமிகு தனிச்சிறப்புகளில் ஒன்று தான் தைப்பொங்கல் திருநாள் ஆகும். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி, மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

தை தீர்வுகளின் மாதம் ஆகும். அதனால் தான் தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் கூறினார்கள். அதற்கேற்ற வகையில் தமிழ்ச் சொந்தங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்; அதற்காக நாம் சிந்திய வியர்வை ஒரு போதும் வீண் போகாது என்பதை தைத்திங்கள் பிறந்ததும் அடுத்தடுத்து வரப்போகும் செய்திகள் அனைவருக்கும் உணர்த்தும்; நமது நம்பிக்கைகள் வெல்லும்.

தமிழர்களின் விருப்பம் போலவே அனைத்துத் தரப்பினரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அதை நிறைவேற்றுவது போன்று நடப்பாண்டில் பொங்கல் பானை பொங்குவதைப் போன்று மக்களின் வாழ்வில் வளங்களும், நலன்களும் பொங்கட்டும்; கரும்பும், சர்க்கரைக் பொங்கலும் இனிப்பதைப் போன்று தமிழர்களின் வாழ்க்கை இனிக்கட்டும்; மஞ்சள் மற்றும் இஞ்சியின் மருத்துவ குணம் கிருமிகளை அழிப்பதைப் போன்று நமது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து நெருக்கடிகளும் விலகட்டும். ஒட்டு மொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைப்பொங்கல் திருநாளும், தமிழ்ப்புத்தாண்டும் புதிய ஒளியை ஏற்றட்டும் என்று கூறி உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்

“பொங்கல் திருநாளில் வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்துவோம்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள். விவசாயம்,விவசாயிகள்,விவசாயக்கூலித் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிபபடுத்துவோம். வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pongal festival leaders wishes cm palaniswami mk stalin vaiko ramadoss thirumavalavan

Best of Express