பொங்கல் பண்டிகை, வார விடுமுறை நாட்கள் என தமிழகத்தில் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். பேருந்து, ரயில், விமானம் மூலம் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து தென் மவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, வைகை, செந்தூர், கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை, பொதிகை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே கூடுதல் சிறப்பு ரயில் அறிவித்துள்ளது. பொங்கல், மகர விளக்கு பூஜையையொட்டி ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று (ஜன.13) இரவு சிறப்பு ரயில் (06151) இயக்கப்படுகிறது. இன்று இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருவனந்தபுரத்துக்கு மறுநாள் மதியம் 2 மணிக்கு சென்றடைகிறது.
இந்த ரயிலானது விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்கிறது.
அதே போல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக பிற்பகல் 2.15 மணிக்கு இயக்கப்பட்டது. தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், அரியலூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.