இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரத்தில் புதுக்கோட்டை திமுக நிர்வாகிகள் 2 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி பெயரில் பாசறை அமைக்கப்பட்டதாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ’எதிர்காலமே மண்ணை பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை போராட்ட களமின்றி வெற்றி கிடைப்பதில்லை ’என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
அத்துடன் இன்பநிதி பாசறையின் சார்பில் செப்டம்பர் 24ம் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் சமூகவலைதளத்தில் பரவியது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில் போஸ்டர் வெளியிட்ட புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் மணிமாறன், திருமுருகன் இருவரும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ புதுகோட்டை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“