தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் அமுல் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் செய்ய அனுமதிக்க கூடாது என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
இத்தடையால் தமிழ்நாடு பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எந்த பயனும் அளிக்காது. ஆவின் நிறுவனத்தை அமுல் நிறுவனத்திற்கு இணையான வகையில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குஜராத் அரசின் நிறுவனமான அமுல் நிறுவனம் பால் உற்பத்தியில் முன்னணி வகிப்பதோடு,உலகம் முழுமையிலும் ஏற்றுமதி செய்து அந்த மாநில அரசுக்கு மிகப்பெரும் வருவாய் ஈட்டி தருவதோடு, விவசாயிகளுக்கும் பயன் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் தனியார் பால் கொள்முதல் செய்வதை விட லிட்டர் 1 க்கு 10 ரூபாய் குறைவான விலையில் கொள்முதல் செய்வதால் ஆவினுக்கு பால் தருவதை விவசாயிகள் மறுத்து வருகிறார்கள்.
எனவே, ஆவின் நிறுவனத்தை அமுல் நிறுவனம் போன்று மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி விவசாயிகளுக்கு கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாறாக விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பதை தடுக்கும் உள்நோக்கத்தோடு அமுல் நிறுவனத்தை தடை செய்வதை ஏற்க முடியாது.
மேலும், தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பாலில் 16 சதத்தை மட்டுமே தான் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது. மீத பால் முழுமையும் தனியாரே கொள்முதல் செய்து வருகிறார்கள்.
காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஆவின் நிறுவனம் உற்பத்தியாளர் குழுக்களையோ, பால் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகளையோ, தேவையான மேம்பாட்டு திட்டங்களை இதுவரையிலும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
இதனால் பெரும்பகுதியான மாவட்டங்கள் பால் உற்பத்தியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும்.
குறிப்பாக நெல் கொள்முதலில் இரட்டைக் கொள்முதல் அமலில் உள்ளதுபோல் பால் கொள்முதலிலும் இரட்டை கொள்முதல் அமல்படுத்தப்பட வேண்டும்.
அரசு நிர்ணயிக்கும் விலையில் ஆவின் மூலம் கொள்முதல் செய்யும் அதே நேரத்தில் தனியார் தேவைக்கேற்ப லாபகரமான வகையில் விவசாயிகளிடம் கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்வதை தடை செய்வதற்கு தமிழக அரசு முன்வரக்கூடாது.
மாறாக அரசு நிர்ணயிக்கும் விலையை விட குறைவாக கொள்முதல் செய்யாமல் கண்கானிக்க வேண்டும்.
எனவே, முதலமைச்சர் தன் கடிதம் குறித்து மறு பரிசீலனை செய்து தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு பயன் அளிக்கிற வகையில் பசும்பால் ஒன்றுக்கு லிட்டர் ரூ.42 ம் எருமை பால் ஒன்றுக்கு ரூ.52 ம் விலை கொடுத்து கொள்முதல் செய்கிற நிலையை உருவாக்க முன்வர வேண்டும்.
அமுல் போன்ற நிறுவனங்கள் கொள்முதல் செய்வதை கண்காணிக்கிற கட்டுப்படுத்துகிற அதிகாரத்தை தமிழக அரசு கையிலெடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500 கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 4500 வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
இரண்டு ஆண்டு பருவ கொள்முதல் முடிந்து மூன்றாம் ஆண்டு பருவக் கொள்முதல் துவங்க உள்ளது. இதுவரையிலும் முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார்.
இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டு காலத்திற்குள்ளாக வேளாண் இடுபொருள்கள் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிற போது நெல் குண்டால் ஒன்றுக்கு ரூ3000 ம் கரும்பு டன் ஒன்றுக்கு 5000 ரூபாயும் கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“