தனியார் பள்ளிகள் முதற்கட்டமாக 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – ஐகோர்ட்

மீதமுள்ள 60% சதவீதத்தை வசூலிப்பது குறித்து சூழ்நிலையை பொறுத்து பின்னர் முடிவெடுக்கலாம்

கட்டண நிர்ணய குழு கட்டண நிர்ணய நடைமுறையை துவங்கி ஆகஸ்டில் இருந்து 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்

பள்ளி கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கட்டண நிர்ணய குழு உடனே நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் 40 சதவீதம் கல்விக் கட்டணம் வசூல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு கடந்த ஏப்.20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. எனினும், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.


கட்டணம் வசூலிக்க கூடாது என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் கே.பழனியப்பன், வேலம்மாள் கல்வி நிறுவனம், செயிண்ட் ஜோசப் பள்ளி நிர்வாகம் உள்ளிட்டவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கல்வி கட்டணத்தை வசூலிக்காமல் ஊதியம் எப்படி வழங்க முடியுமெனவும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்களுக்கு யார் ஊதியம் கொடுப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பியது. பின்னர் தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.

தமிழகத்தில் புதிதாக 4,538 பேருக்கு கொரோனா – 79 பேர் உயிரிழப்பு

இந்த வழக்குகள் இன்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கல்வி நிறுவனங்கள் தரப்பில், இந்த ஆண்டு ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என ஆசிரியர்களுக்கு இடைக்கால உத்தரவில் பிறப்பிக்க வேண்டும் எனவும், பாட புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும், அதேசமயம் கல்வி நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்வி நிறுவன கட்டிடங்களின் சொத்துவரி தொடர்பாக அரசிடம் கொடுத்த மனுவை பரிசீலிக்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கபட்டது.

அரசு தரப்பில், தனியார் பள்ளிகளை பொறுத்தவரை 75 சதவீத கட்டணத்தை மூன்று தவணைகளாக பெற்றுக்கொள்ள அனுமதிப்பதாவும், அதன்படி தற்போது 25 சதவிகிதம், பள்ளிகள் திறந்த பின் 25 சதவிகிதம், பள்ளிகள் திறந்து 3 மாதம் கழித்து 25 சதவிகிதம் என்ற அடிப்படையில் வசூலித்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது,

மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தை பொறுத்தவரை தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு இந்தாண்டுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்த பின் வசூலித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

தாமதமாக செலுத்தினாலும் மாணவர்கள் மீது பள்ளிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்படும் எனவும், மாணவர்கள் தண்டிக்கப்பட்டால் பள்ளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் எல்லாம், தற்போதைய சூழலில் சாத்தியமில்லை எனவும், பல பெற்றோர் சார்பில் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக மனுக்கள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசை பொறுத்தவரை பெற்றோர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் என அனைவரின் தரப்பையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் மதியம் 2:15க்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார். பிறகு, நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், “கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்து வந்தாலும், ஒவ்வொரு நாளும் புதிய கோணத்தில் கொரோனா தொடர்கிறது. இதன் தாக்கம் எப்போது குறையும் தெரியாத நிலையில் உள்ளது.

அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் இந்த வழக்குகளை தொடர்ந்துள்ளது. எனவே அரசு அவர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து உரிய முடிவை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் செயல்பட தொடங்கினால்தான், உதவி பெறாத கல்வி நிறுவனங்கள் செயல்பட முடியும் என கல்வி நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ

அதேநேரத்தில் கட்டணம் செலுத்தக்கூடிய நிலைமையில் இல்லை என்ற பெற்றோர் தரப்பில் சொல்லப்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது. பள்ளிகளுக்கான கட்டணத்தில் 75 % கட்டணத்தை வசூலிக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.

இரண்டாம் தவணை 25% -ஐ பள்ளிகள் திறக்கும்போது வசூலிக்கலாம் என சொல்லும் நிலையில் எப்போது திறக்கும் என தெரியாத நிலையில் உள்ளது.

அதனால், அரசு உதவி பெறாத அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் 2020-21 முதல் தவணையை 25% க்கு பதிலாக 40%-ஐ ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்கலாம். மீதமுள்ள 60% சதவீதத்தை வசூலிப்பது குறித்து சூழ்நிலையை பொறுத்து பின்னர் முடிவெடுக்கலாம்.

இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அரசு உதவிபெறாத அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (கல்லூரி + பள்ளி) பொருந்தும். கட்டண நிர்ணய குழு கட்டண நிர்ணய நடைமுறையை துவங்கி ஆகஸ்டில் இருந்து 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரக்கூடாது, பாட புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைவான கட்டணத்திலோ வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்”

என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அக்டோபர் -5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

உலக அரசியல் பேசிய என் தந்தை இன்ஸ்பிரேஷன்! வித்யாராணி வீரப்பன் ஸ்பெஷல் பேட்டி

கல்லூரிக் கட்டணம் :

இந்த வழக்கில், தமிழக உயர் கல்வித் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் இதுவரை முடிவெடுக்காத நிலையில், கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்வியே எழவில்லை எனவும், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பெற்றோரால் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களை செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கல்லூரிகள் சங்கம் அளித்த மனுவை பரிசீலித்து, கல்விக் கட்டணத்தை இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் என மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Private school fees 40 madras high court tamil nadu govt

Next Story
போதைப் பொருள் கடத்தலை தடுக்க என்ன நடவடிக்கை? ஐகோர்ட் கேள்விChennai High court, Drug Addiction
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X