பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : குற்றம் சாட்டப்பட்ட பல்கலைக்கழகமே விசாரணையும் நடத்துமா?

'பல்கலைக்கழக குழுவின் விசாரணை உடனே தடை செய்யப்பட வேண்டும்; சிபிஐ அல்லது சிபிசிஐடி போன்ற தனித்துவமான அமைப்பு இதை விசாரிக்க வேண்டும்'

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க பல்கலைக்கழகமே விசாரணைக் குழு அமைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நிர்மலா தேவி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியை! இவர் அங்கு மாணவிகள் சிலரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்க முயன்ற நிகழ்வு அம்பலமாகியிருக்கிறது. இது தொடர்பாக சில மாணவிகளிடம் நிர்மலா தேவி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியிருக்கிறது.

நிர்மலா தேவியை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. கல்லூரி நிர்வாகம் மற்றும் மாதர் சங்கம் புகாரின் அடிப்படையில் நிர்மலா தேவியிடம் அருப்புக்கோட்டை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே நிர்மலா தேவி மீதான புகாரை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்திருக்கிறது. பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு விருந்து வைக்கவே புரோக்கராக மாறி மாணவிகளுக்கு நிர்மலா தேவி வலை விரித்ததாக புகார் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்த விவகாரத்தை பல்கலைக்கழகமே விசாரித்தால் உண்மை வெளியாகாது என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

பல்கலைக்கழக குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவிகளை சந்தித்து விசாரணை என்ற பெயரில் அவர்களை திசை மாற்றி அல்லது பயமுறுத்தி, ‘இதில் ஒன்றுமே இல்லை’ என முடித்துவிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதாவது, சாட்சிகளை கலைக்கும் வேலையை இந்த விசாரணைக்குழு கச்சிதமாக செய்து முடித்துவிடக் கூடும்.

எனவே பல்கலைக்கழக குழுவின் விசாரணை உடனே தடை செய்யப்பட வேண்டும்; சிபிஐ அல்லது சிபிசிஐடி போன்ற தனித்துவமான அமைப்பு இதை விசாரிக்க வேண்டும் என கல்வியாளர்களும் மாதர் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மீதே புகார் உள்ள நிலையில் பல்கலைக்கழகமே அவசரம் அவசரமாக விசாரணைக் குழு அமைத்திருப்பது சந்தேகங்களை அதிகப்படுத்தியிருக்கிறது.

 

×Close
×Close