பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கை மாற்றக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கை மாற்றக் கோரிய வழக்கு

பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி மாணவிகளை வற்புறுத்திய அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கின் விசாரணையை, பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் தாக்கல் செய்துள்ள மனுவில்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவி உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி செல்போனில் மாணவிகளை வற்புறுத்தும் உரையாடல் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியானது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மிகப்பெரிய, செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் எல்லாம் அடிப்பட்டது.

இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த ஜெயந்த்முரளி திடீரென மாற்றப்பட்டார். அந்த பதவிக்கு கூடுதல் டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். நிர்மலாதேவி வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவில் உள்ள உயர் அதிகாரி மாற்றப்பட்டது, பலருக்கு சந்தேகத்தை உருவாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் கவர்னர் உயர் மட்ட விசாரணை குழுவை அமைத்துள்ளதாக அறிவித்தார்.

இவ்வாறு ஒரு குழுவை அமைப்பதற்கு முன்பு மாநில அரசுடன் அவர் ஆலோசனை செய்யவில்லை. இதுபோன்ற விசாரணை குழுவை அமைக்க கவர்னருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

ஒரு குற்றச் சம்பவத்துக்கு பல விதமான விசாரணைகள் நடத்தப்பட்டால், அது சரியாக இருக்காது.
எனவே, டி.ஐ.ஜி. பதவிக்கு குறையாத, குறிப்பாக பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். இந்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும். இந்த குழுவின் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.

மேலும், அந்த கல்லூரி மாணவிகள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்ற வேண்டும்.

அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில், ஊடகங்கள், மற்றும் செய்தித்தாள்களில் வரும் செய்தியை அடிப்படையாக வழக்கு தொடரமுடியாது. மேலும் குற்றம்சாட்டபட்டவரின் ஒப்புதல் வாக்குமூலம் எப்படி வெளி வருகின்றது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் இது போன்ற விசயங்கள் எப்படி வெளிவருகின்றது. அரசு அதிகாரிகள் யார் என கேள்வி எழுப்பினார். மேலும் பத்திரிக்கை சுகந்திரம் என்பதை எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக அரசு, காமராசர் பல்கலைக்கழகம் ஆகியோர் வரும் 23 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.

×Close
×Close