மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் புதிய மதுக்கடைகளை திறக்கக்கூடாது; மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்; தமிழக அரசு கடைபிடித்துவரும் மதுக்கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

சென்னை ஐகோர்ட் உத்தரவை ஏற்று, தமிழகத்தில் மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்கள் நலனை விட, மது விற்பனையே முக்கியம் என்று செயல்பட்டு வரும் ஆட்சியாளர்களுக்கு உறைக்கும் வகையில் சில அறிவுரைகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து ஆலோசனைகளை வழங்கும் அளவுக்கு மிக மோசமான மதுக்கொள்கையை உருவாக்கி கடைபிடித்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை; மாற்றப்பட வேண்டியவை.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் படூர் என்ற இடத்தில் கல்லூரிக்கு அருகில் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரவிச்சந்திரபாபு கூறியுள்ள கருத்துக்கள் ஆட்சியாளர்களின் மனக் கதவுகளை திறக்கும் அளவுக்கு வலிமை கொண்டவை. “விதிகளுக்கு உட்பட்டுத் தான் மதுக்கடைகள் அமைக்கப்படுகின்றன என்றாலும் அவற்றை அப்படியே அனுமதிக்க முடியாது. மக்கள் நலனையும், மக்களின் மனநிலையையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு குற்றங்களுக்கும் மது தான் அடிப்படையாக உள்ளது. அப்படிப்பட்ட மதுவை அரசே விற்பனை செய்வதை எப்படி ஏற்க முடியும்? மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்; கள்ளச்சாராயத்தைக் குடித்து மக்கள் உயிரிழப்பதை தடுப்பதற்காகவே மது விற்கப்படுகிறது என்று அரசின் சார்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டாலே கள்ளச்சாராயத்தை ஒழித்து விட முடியும்’’ என நீதிபதி கூறியிருக்கிறார்.

‘‘அரசுக்கு வருவாய் ஈட்ட மது விற்பனை ஒரு வழியாக இருக்கலாம். அரசுக்கு வருமானம் ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றை விடுத்து மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து வருமானம் ஈட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ‘மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு’ என்று மது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது. மதுக் கொள்கையை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழக அரசு உடனடியாக மதுக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்’’ என்றும் நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார். மதுவின் தீமைகளையும், மதுக்கடைகளை மூடி, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதை விட எளிதாகவும், தெளிவாகவும் அரசுக்கு புரியவைக்க முடியாது.

இதற்கு முன்பும் பலமுறை மதுக்கடைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்த பல்வேறு நீதிபதிகள் மதுவிலக்குக்கு ஆதரவான தீர்ப்புகளையே வழங்கியுள்ளனர். புதிய மதுக்கடைகளை திறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த மே 11-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘தமிழகத்தில் புதிய மதுக்கடைகளை திறக்கக்கூடாது; மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்; தமிழக அரசு கடைபிடித்துவரும் மதுக்கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று ஆணையிட்டனர்.

இதுதவிர மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது, மதுக்கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் அந்தப் பகுதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் ஆணையிட்டுள்ளார். ஆனால், ஊழல் போதையில் திளைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு இத்தீர்ப்புகளையும், நீதிபதிகள் வழங்கிய அறிவுரைகளையும் மதிக்காமல் புதிது புதிதாக மதுக்கடைகளை திறந்து கொண்டே இருக்கிறது. பினாமி முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி என்ற பேரூராட்சியில் மட்டும் நேற்று முன்நாள் 7 மதுக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுக்கடைகளை திறப்பதிலிருந்தே தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை அறிய முடியும்.

மதுவால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் மக்கள் அனுபவித்திருகிறார்கள். மகன்களை இழந்த தாய்மார்களும், இளம்வயதில் கணவனை இழந்த மனைவியரும் தமிழக ஆட்சியாளர்களை சபித்துக் கொண்டிருக்கிறார்கள். பணத்திற்கு மயங்கி தவறானவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பளித்து சூனியத்தை தேடிக்கொண்டோமே என்று மக்கள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். இதை உணர்ந்தும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதித்தும் தமிழகத்தில் வரும் விடுதலை நாள் முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியாளர்களை மக்களின் சாபமே சாய்த்து விடும்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close