கஜ புயல் பாதிப்பு பகுதிகளில் போராட்டம்... 5 அரசு வாகனங்களுக்கு தீ வைப்பு

கஜ புயல் கடந்து 3 நாட்களான நிலையிலும் தற்போதையை சூழல் சீராகாததால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 அரசு வாகனங்களுக்கு தீ வைப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் கஜ புயலின் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் புயல் தாக்கி 3 நாட்களான நிலையிலும் அப்பகுதிகளின் நிலையை சீர் செய்யாத காரணத்தால் சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது அப்பகுதிக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ் மணியன் மற்றும் கான்வாய் கார்கள் என 5 அரசு வாகனங்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் 5 வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

வாகனங்களுக்கு தீ வைப்பு

புயல் பாதித்த பகுதிகளை சீர் செய்ய அரசு எவ்வித உதவியும் எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை இரவே சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் ஆலங்குடி தாசில்தார் ரெத்தினவதி அப்பகுதி வந்து பார்வையிட்டார். இந்த நிகழ்வின்போது தாசில்தார் ரெத்தினவதியை வழி மறித்து பொதுமக்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். பின்னர் அப்பகுதிக்கு உடனே விரைந்த மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார் மற்றும் ஆலங்குடி துணை கண்காணிப்பாளர் அய்யனார் ஆகியோர் விரைந்தனர். பிறகு மக்களிடம் பேசி பதற்றமான சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் இந்த நிலை சில நேரத்திலேயே மோசமாக மாறி, அதிகாரிகளின் வாகனங்களுக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும் அதிகாரிகள் மீது கல்வீசவும் செய்தனர். இதனால் துணை கண்காணிப்பாளர் அய்யனார் காயமடைந்தார். காயமடைந்த அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதே சமயம் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. நிவாரண பொருட்கள் எடுத்து வரப்பட்ட அரசு வாகனங்களும் மறிக்கப்பட்டு தாக்கப்பட்டது. இத்தகைய எதிர்ப்பு போராட்டங்கள் கோடியக்கரை, முத்துப்பேட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். இவர்கள் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஜாம்பவநோடை, நச்சிக்குளம், ஆலங்குடி, தம்பிக்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி ஒருவர், “கிராம மக்கள் அவர்களுக்கு உதவ வரும் மருந்துகள், மின் கம்பங்கள் மற்றும் உணவு பொருட்கள் வந்தடைய அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் மீட்பு பணிகள் நடைபெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close