Advertisment

மருத்துவரை அடக்கம் செய்ய இடையூறு: சென்னை ஐகோர்ட் தாமாக வழக்குப் பதிவு

கொரோனாவால் பலியான மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மருத்துவரை அடக்கம் செய்ய இடையூறு: சென்னை ஐகோர்ட் தாமாக வழக்குப் பதிவு

கொரோனா தொற்று காரணமாக பலியான சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நரம்பியல் நிபுணராக, 30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கீழப்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் எடுத்து சென்றனர்.

அப்போது, மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், உடலை வேறு ஒரு மயானத்துக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது, அவரது உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அரசு ஊழியர்களும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தொலைக்காட்சி செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, கொரோனா தொற்றால் பலியானவர்களின் உடல்களை கையாள்வது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிகாட்டி விதிமுறைகளை அறிவித்துள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

கண்ணியமான நல்லடக்கம் என்ற உரிமை, புனிதமான மருத்துவ தொழில் செய்தவரின் உடலுக்கு வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கடமையைச் செய்யச் சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும், குடிமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், தமிழக காவல்துறை தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்த டாக்டரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய விடாமல் தடுத்தவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள் ஊடகத்துறையினர் மற்றும் அத்தியாவசிய துறையினர் இரவு, பகல் பாராது போராடி வருகின்றனர். இதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது சேவையாற்றி வருகின்றனர். ஆனால், கொரோனா தொற்று காரணமாக சென்னை நரம்பியல் நிபுணரும், 30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்த டாக்டர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் சென்ற போது அப்பகுதியில் உள்ள சமூக விரோதிகள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கற்களை வீசி தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.இதில் உடன் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்களும் தாக்கப்பட்டுள்ளனர். கடைசியில் காவல்துறையின் உதவியுடன் அவரது உடல் வேறு ஒரு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் டாக்டர்கள் இறந்தால்

அவர்களை மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்கு கூட பொதுமக்கள் மறுத்து

தாக்குதல் நடத்துவது மனிதாபிமானமற்ற செயலாகும். அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்களையும், சிறுவியாபாரிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று மிரட்டுவது. பல மணி நேரம் பிடித்து வைப்பது. அந்த மக்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் டாக்டரின் உடலை நல்லடக்கம் செய்யவிடாமல் தடுத்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லடக்கம் என்பது மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள உரிமை. எனவே, டாக்டரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை

காவல் ஆணையர்க்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai High Court Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment