Advertisment

விபூதியுடன் சென்ற பெண் போலீஸ்; வேங்கை வயல் அத்துமீறல்கள்: எவிடன்ஸ் கதிர் பேட்டி

”பொது சமூகத்தின் அமைதிதான், இது போன்ற சம்பவங்களை எளிதாக கடந்து போகச் செய்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். சட்டரீதியாக தொடர்ந்து போராடினால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருவாக்க வேண்டும்”. - எவிடென்ஸ் கதிர்

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
விபூதியுடன் சென்ற பெண் போலீஸ்; வேங்கை வயல் அத்துமீறல்கள்: எவிடன்ஸ் கதிர் பேட்டி

”தீண்டாமை ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமல்ல, இந்துக்களையும் இறுதியில்  நாட்டையும் பாழாக்கிவிட்டது “-அம்பேத்கர்

Advertisment

இந்த வரிகளுக்கு பின்னால் இருக்கும் ஆழ்ந்த உண்மையை வெளிப்படுத்தும் விதத்தில் புதுக்கோட்டை,  வேங்கைவயலில்  பட்டியலின மக்கள் வசிக்கும், பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக களத்தில் பணியாற்றி வரும் எவிடன்ஸ் கதிருடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக பேசினோம்.

இந்த சம்பவம் தொடர்பாக செயல்பட வேண்டும் என்று எது உங்களை உந்தித்தள்ளியது ?

“நாம் நவீன தொழில்நுட்பம்,வல்லரசு என்று பேசுகிறோம். ஆனால் குடிக்கும் நீரில் மலம் கலக்கும் சம்பவம் இங்கே நடைபெற்றுள்ளது. தொடர்ந்து 27 வருடங்களாக சமூக பிரச்சனைகளுக்காக இயங்கி வருகிறேன். வாயில் மலம் திணிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில்தான் நடந்தது. அந்த சம்பவம் தொடர்பாகவும் நான் பணியாற்றி இருக்கிறேன். எனது மனசாட்சி என்னை கேள்வி கேட்பதால் இதைப் பற்றி பேசுகிறேன்”

காவல்துறையினர்  வழக்கை திசை திருப்புகிறார்கள்  என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது பற்றி கூற முடியுமா ?

 காவல்துறையினர் செயல்பாடு, மேலும் வேதனை அளிக்கிறது. வேங்கைவயலில் வசிக்கும் குழந்தைகள், கடந்த வருடம் டிசம்பர் 24 மற்றும் 25  தேதிகளில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுகிறார்கள். தண்ணீரில்தான் பிரச்சனை என்று மருத்துவர்கள் கூறியதால், அப்பகுதி இளைஞர்கள் முத்துகிருஷ்ணன், சுதர்சன், முரளிராஜா, தண்ணீர் தொட்டிக்கு மேலே சென்று பார்க்கிறார்கள். அப்போது தண்ணீர் கலங்களாக இருப்பதும், அதில் மலம் கலந்திருப்பதும் தெரிகிறது. தண்ணீரில் இருந்த மலத்தை ஒரு பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைத்துள்ளனர். அதை அவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறை, பாதிக்கப்பட்ட மக்களை மட்டும் அழைத்து விசாரித்துள்ளது. மேலும் தொட்டியின் மீது ஏறிய இளைஞர்களிடம் விசாரணை என்ற பெயரில், தேவையில்லாத கேள்விகளை காவல்துறையினர் கேட்டுள்ளனர். மேலும்  முத்துக்கிருஷ்ணனின் சகோதரர் கண்ணதாசன், இது தொடர்பாக புகார் அளித்த கனகராஜ் ஆகியோரை விசாரணை என்ற பெயரில் குற்றத்தை ஒப்புக்கொள்ள காவல்துறையினர் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

 முன்னாள் பஞ்சாயத்து தலைவரான சிதம்பரம், பட்டியலின மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். ஆனால் அவரின் தூண்டுதலின் பெயரில் பட்டியலின இளைஞர்கள் குடிநீர் தொட்டியில் மலம்  கலந்துள்ளனர் என்ற கட்டுக்கதையை காவல்துறை உருவாக்க முயற்சிக்கிறது.

விசாரணையின் போது ஒருமையில் அழைப்பது, தாக்க  முயற்சி செய்வது போன்ற விஷயங்களை தனிப்படை போலிசார் செய்துள்ளனர். பட்டியலின மக்கள் தாங்களாகவே தண்ணீரில் மலம் கலந்ததாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காக, விசாரணையின் போது காவல்துறையினர் பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தி உள்ளனர்.

அரசு வேலை வாங்கித் தருகிறோம், வீடு தருகிறோம் குற்றத்தை ஒப்புக்கொள்ளுங்கள் என்றும் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மனநல பாதிக்கப்பட்டவரை வைத்து தான் வழக்கை முடிக்க வேண்டும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணைக்கு சென்ற பட்டியலின மக்களின் பண பரிவர்த்தனை விவரங்களை எடுத்து வைத்துக்கொண்டு, மலம் கலக்க தூண்டியவர்கள்தான் உங்களுக்கு பணம் அனுப்பி உள்ளனர் என்றும் உங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டு காவல்துறையினர் மிரட்டி உள்ளனர் . மேலும் ஜிபே-யின் விவரங்களை வைத்தும், இதே கேள்வியை காவல் துறையினர் கேட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட மக்கள்  எதற்காக பணம் அவர்கள் வங்கி கணக்கிற்கு வந்தது என்ற ஆதாரத்தை சமர்பித்த பிறகு காவல் துறையினர் ஏதும் பேசாமல் அமைதியாகிவிட்டனர்.

பெண் காவலர்களிடம் திருநீர் கொடுத்து அனுப்பி, பட்டியலின பெண்களிடம், உங்கள் குல சாமி கொடுத்தது என்றும் உங்கள் தெருவில்தான் குற்றவாளிகள் இருப்பதாக சாமி சொல்கிறது என்று கூறி உள்ளனர். மேலும் இந்த திருநீரை எடுத்துக்கொண்டு, உண்மையை சொல்லுமாறும் பெண் காவலர்கள் கேட்டுள்ளனர்.

தமிழக பாஜக ஐடி பிரிவின் தலைவர் சி.டி.ஆர், நிர்மல்குமார் கடந்த ஜனவரி 13-ம் தேதி வெளியிட்ட  வீடியோ தொடர்பாக உங்கள் கருத்து என்ன ?

பாஜகவின் தரம்தாழ்ந்த அரசியல்தான் இது. தண்ணீர் தொட்டிக்கு மேல்  ஏறிய பட்டியலின இளைஞர்கள் சாட்சிக்காக எடுத்த வீடியோதான் அது. அதில் மலம் கலப்பது போல் எந்த காட்சியும் இடம் பெறாது. வழக்கை திசை திருப்பும் முயற்சியை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்காக பேசாமல், அங்கிருக்கும் ஆதிக்க சாதியினர் குற்றமற்றவர்கள் என்று பாஜக கூறுகிறது. 

அரசு இந்த விஷயத்தை எப்படி கையாள்கிறது? சமூக நீதிதான் திராவிட மாடலின் அடிப்படை தத்துவம் என்று முதல்வர் சட்டமன்றத்தில் கூறுகிறார்? இது பற்றி உங்கள் கருத்து

ஆளும் கட்சியான திமுக, பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்கவில்லை. ஆதிக்க சாதி வாக்குகள்தான் முக்கியம் என்று நினைக்கும் அவர்கள், பட்டியலின மக்களின் வாக்குகளுக்கு எந்த மரியாதையும் கொடுக்கவில்லை. அரசால் அமைக்கப்பட்ட தனிப்படையின் விசாரணை சரியான பாதையில் செல்லவில்லை என்று அரசுக்கு தெரிந்ததால்தான் இப்போது சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விசாரணையாவது சரியான வழியில் நடைபெற வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்கள் அமைப்பு செய்யும் உதவிகள் என்ன ?

பட்டியலின மக்களின் மீதே வழக்கை திசை திருப்பும், கொடூரத்தை நாங்கள் தலையிட்டு தடுத்து நிறுத்தியிருக்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் கொடுத்த புகார்களை உயர் அதிகாரிகளிடம் அனுப்பி இருக்கிறோம். சட்ட ரீதியாக வழக்கை பதிவு செய்து, தொடர் சட்டப் போராட்டம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். 

இந்த சம்பவம் தொடர்பாக களத்தில் செயல்பட்ட அரசியல் கட்சிகள் பற்றி?

சி.பி.எம் கட்சியின்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. வி.சி.க தலைவர் திருமாவளவன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.  இந்த இரு கட்சிகளும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தொடர்ந்து போராடி வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சி சார்பாக செல்வப்பெருந்தகை, எம்பி திருநாவுக்கரசு, வைக்கோவின் மகன், ஆம் ஆத்மி கட்சி, அம்பேத்கர் இயக்கங்கள், பெரியார் இயக்கங்கள் இப்பகுதிக்கு வந்து மக்களை சந்தித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக பொதுச்சமூகத்தின் மீது கோபம் ஏற்படுகிறதா?

பொது சமூகத்தின் அமைதிதான், இது போன்ற சம்பவங்களை எளிதாக கடந்து  போகச் செய்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். சட்டரீதியாக தொடர்ந்து போராடினால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உருவாக்க வேண்டும். சாதியை கடந்து பல மனிதர்கள் உதவி செய்கிறார்கள். அவர்களை பார்க்கும்போது சிறிது நம்பிக்கை ஏற்படுகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தை ஏன் தீண்டாமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்?

அப்படி அறிவிப்பதால், தீண்டாமை புகார்களை விசாரிக்க தனி அமைப்பு உருவாக்கப்பட்டு, தீவிரமாக விசாரணை நடைபெறும். இப்படி அறிவிப்பதால், அம்மாவட்டத்தை அவமதிக்கும் செயலாக அது இருக்காது. சமத்துவத்தை நிலைநாட்ட இது உதவும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment