திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை; மனைவியுடன் சேர்ந்து கொள்ளை நாடகமாடிய வடமாநில ஊழியர்

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கொள்ளையில் மனைவியுடன் சேர்ந்து கொள்ளையடித்து நாடகமாடிய வடமாநிலத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Railway employee arrested on Thiruvanmiyur station loot case: சென்னை, திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரிடம் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், அந்த ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் ஊழியரே மனைவியுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று (ஜனவரி 3) அதிகாலை 4.30 மணியளவில் டிக்கெட் கவுண்ட்டர் திறக்கப்படாமல் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் இதுபற்றி கேட்டனர்.

இதனையடுத்து ரயில்வே போலீசார், வெளியே பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே ஊழியர் ஒருவர், அங்கிருந்த ஜன்னலில் கை, கால்களை பின்னால் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து திணிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை விடுவித்து ரயில்வே போலீசார், இதுபற்றி அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் தன்னை முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கட்டிப்போட்டு விட்டு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறினார். உடனடியாக இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ரயில்வே போலீஸ் அதிகாரிகள், சம்பவம் நடந்த இடம், ரயில் நிலைய நடைமேடைகளை ஆய்வு செய்ததோடு, ரயில்வே ஊழியரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ‘தனது பெயர் டீக்காராம் மீனா (வயது 28) என்றும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த 4 ஆண்டுகளாக தெற்கு ரயில்வேயில் டிக்கெட் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், அதிகாலை 4.10 மணிக்கு முதல் ரயில் சேவை துவங்கும் என்பதால் நான் அதிகாலை 3.50 மணிக்கே டிக்கெட் கவுண்ட்டரை திறந்துவிடுவேன். இன்றும் (நேற்று) வழக்கம்போல டிக்கெட் கவுண்ட்டரை திறப்பதற்காக பின்புறம் வழியாக உள்ளே நுழைந்தேன். திடீரென என் பின்னால் வந்த முகமூடி அணிந்த 3 பேர், என்னை பிடித்து டிக்கெட் கவுண்ட்டர் அறைக்குள் தள்ளினார்கள். நான் சுதாரிப்பதற்குள், அதில் ஒருவர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு, சத்தம் போட்டால் சுட்டு விடுவேன் என மிரட்டினார். அதனால் நான் உயிர் பயத்தில் சத்தம் போடவில்லை. பின்னர் 3 பேரும் சேர்ந்து என்னை கட்டிப்போட்டு, வாயில் துணியை திணித்துவிட்டு, டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த ரூ.1.32 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, கதவையும் வெளிபக்கமாக பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். என்று அவர் கூறினார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைத்து சோதனை மேற்கொண்ட திருவான்மியூர் ரயில்வே போலீசார், இதுபற்றி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், டிக்கெட் கவுண்டரில் பணியாற்றும் ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமே தனது மனைவியுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது தற்போது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை தெரிந்துக்கொண்ட டீக்காராம் தனது மனைவியுடன் இணைந்து இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். நேற்று அதிகாலை டீக்காராம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் சென்ற சில நிமிடங்களில் அவரது மனைவி சரஸ்வதி பின் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த ரூ.1.32 லட்சம் பணத்தை டீக்காராம் தனது மனைவியிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, கொள்ளைப்போனது போல் தோற்றத்தை உருவாக்க மனைவியை தனது கை, கால்காளை கட்டிவிட்டு வாயில் துணியை வைத்து செல்லும்படி கூறியுள்ளார். இதனையடுத்து, டீக்காராமின் மனைவி பணம் ரூ.1.32 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது கணவன் கூறியபடி செய்து விட்டு சென்றுள்ளார்.

ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் டீக்காராமும், அவரது மனைவியும் ரயில் நிலையத்திற்குள் செல்வதை கண்டுபிடித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரயில்வே பணம் ரூ.1.32 லட்சத்தை தாங்களே கொள்ளையடித்துவிட்டு கொள்ளைப்போனதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, ரயில்வே ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரெயில்வே பணம் ரூ.1.32 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Railway employee arrested on thiruvanmiyur station loot case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express