விடியவிடிய பெய்த மழை... பள்ளிகள் இன்று வழக்கம் போல இயங்கும்!

இன்றும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் இன்று(நவ.,14) வழக்கம் போல செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் மழை வேகமகாவும் பொழியவில்லை, அதேசமயம் மழை நிற்கவுமில்லை. தொடர்ந்து சாரல் மழை பெய்துக் கொண்டிருக்கிறது. மந்தவெளி, மைலாப்பூர், ராயப்பேட்டை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு, கும்மிடிபூண்டி, பொன்னேரி, புழல், செங்குன்றம், மாதவரம், திருவள்ளூரில் விடிய விடிய மழை பெய்தது.

மழை காரணமாக நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இம்மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், வங்கக் கடலில் தென்மேற்குப் பகுதியில் தொடங்கிய காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெற்றுள்ளது. வங்கக் கடலின் மேற்கு மத்தியப் பகுதியிலும் காற்றழுத்த நிலை பரவியிருக்கிறது. இதன் காரணமாக, 14-ம் தேதி (இன்று) ஆந்திரப்பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். ராயலசீமா, தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். 15-ம் தேதியன்று ஒடிசா, ஆந்திராவின் கடலோரப் பகுதிகள், தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 12-ம் தேதி காலை 8.30 மணி முதல் 13-ம் தேதி காலை 8.30 வரை 1.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. சென்னையில் இதே காலகட்டத்தில், 46.6 மி.மீ மழை பெய்திருக்கிறது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 246.7 மி.மீ மழை பெய்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை, 725.8 மி.மீ மழை பெய்திருக்கிறது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 769.3 மி.மீ மழை பெய்திருக்கிறது.

×Close
×Close