முதல் முறையாக மத்திய அரசைக் கண்டித்த ரஜினிகாந்த்: ‘டெல்லி வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வி காரணம்’ என்கிறார்

டெல்லியில் நடந்துகொண்டிருகிற போராட்டங்கள் எல்லாமே மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வி; இதனால், மத்திய அரசை கடுமையாக கண்டிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை கூறியுள்ளார்.

By: Updated: February 27, 2020, 07:19:25 AM

டெல்லியில் நடந்துகொண்டிருகிற போராட்டங்கள் எல்லாமே மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வி; இதனால், மத்திய அரசை கடுமையாக கண்டிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில், புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அபோது செய்தியாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேள்வி: இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுப்பேன் என்று கூறினீர்கள்; சிஏஏ சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்; இன்னும் ரஜினிகாந்த்தின் குரல் ஒலிக்கவில்லை என்பது பலரின் கருத்து; அது பற்றி..

ரஜினி: சிஏஏ சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் யாராவது பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக நான் நிற்பேன். சிஏஏ சட்டத்தால் பாதிக்கப்பட்டால் என்று சொன்னேன். சரியா?


கேள்வி: டெல்லி வன்முறையில் 20 பேர் இறந்திருக்கிறார்கள்; இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ரஜினி: இப்போது டெல்லியில் நடந்துகொண்டிருக்கிற போராட்டங்கள் எல்லாமே கண்டிப்பாக மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வி. மத்திய அரசை நான் கடுமையாக கண்டிக்கிறேன். டிரம்ப் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும்போது அவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் உளவு வேலையை சரியாக செய்ய வில்லை. வன்முறையை இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். இனிமேலாவது அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி: டெல்லி வன்முறையில் 20 பேர் பலியாகி உள்ளனர். உள்துறை அமைச்சகம் இந்த வன்முறையை நிறுத்த தவறிவிட்டது பற்றி?

ரஜினி: அதைத்தான் நான் சொன்னேன். உளவுத்துறை தோல்வி என்றால் அது உள்துறை அமைச்சகம் தோல்வி என்பதுதான்.

கேள்வி: நீங்கள் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறீர்கள். சிஏஏவை வைத்து நிறைய பேர் அரசியல் செய்கிறார்கள். மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். பாஜக தலைவர் கபில் சர்மா டெல்லி வன்முறை நடந்தது என்று கூறுகிறார்கள். டெல்லி தேர்தலில் மதத்தை வைத்து எப்படி அரசியல் செய்யப்பட்டது பற்றி பார்த்தோம். மதத்தை வைத்து அரசியல் செய்வது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? எவ்வளவு வண்மையாக கண்டிக்கிறீர்கள்?

ரஜினி: இதை நான் ரொம்ப வன்மையாக கண்டிக்கிறேன். நான் முதலிலேயே சொன்ன மாதிரி சில பேர், சில கட்சிகளில் சில பேர் மதத்தை வைத்து தூண்டுகோளாக அரசியல் செய்கிறார்கள். இது சரியான போக்கு கிடையாது. மத்திய அரசு இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவில்லையென்றால் வரும்காலத்தில் ரொம்ப கஷ்டமாகிவிடும்.

கேள்வி: மத்திய அமைச்சர்கள் கோலி மாரோ சாலங்கோ என்ற நடைமுறை என்பது அரசியலில் வந்திருக்கிறது? எவ்வளவு கவலையானது இது?

ரஜினி: இதை யாராவது ஒருத்தர் பேசினால் பொதுவாக எல்லாரும் பேசினார்கள் என்று எல்லார் மீதும் பழி போகிறது. மொத்தத்தில் முக்கியமாக ஊடகங்கள், தயவு செய்து நான் ஊடகங்களை கை வணங்கி கேட்டுக்கிறேன். இந்த மாதிரி சூழலில் நீங்கள்தான் உறுதுணையாக இருந்து எது நியாயம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். யாரையும் தூண்டக் கூடாது என்று ஊடகங்களுக்கு வைக்கும் வேண்டுகோள்.

ஒன்று மட்டும் நான் சரியாக சொல்கிறேன். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். இந்த சிஏஏ சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்து உச்ச நீதிமன்றம் சென்று சட்டமாக வந்துவிட்டது.

கண்டிப்பாக இந்த சட்டத்தை திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. இவர்கள் என்ன போராட்டம் செய்தாலும் அதனால் எந்த பிரயோசனம் இல்லை என்பது என்னுடைய கருத்து. உடனே நான் வந்து பிஜேபியின் ஊதுகோள், நான் பிஜேபியின் ஆள், பிஜேபி என் பின்னால் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதிலும், சில பத்திரிகையாளர்கள், சில மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் அவர்கள் சொல்வதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. நான் என்ன உண்மையோ அதை சொல்கிறேன். அவ்வளவுதான்.

கேள்வி: இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அசோக் நகரில் ஒரு மசூதியில் காவி நிறம்கொண்ட கொடி ஏற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் குறிவைக்கப்பட்டிருக்கிறார்களா?

ரஜினி: ஆரம்பத்திலேயே இதை கிள்ளி எறிய வேண்டும். மத்திய அரசானாலும், மாநில அரசானாலும் இதை கையாள வேண்டும். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதே என்னுடைய அன்பான வேண்டுகோள்.

கேள்வி: தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் எல்லோரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறியிருந்தீர்கள்.

சிஏஏ சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக நான் அவர்களுக்காக குரல் கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

கேள்வி: சிஏஏ என்.ஆர்.சி, என்.பி.ஆர். முஸ்லிம்களை விலக்குகிறது என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

ரஜினி: என்.ஆர்.சி பற்றி அவர்கள் தெளிவாக சொல்லிவிட்டார்கள். அவர்கள் இன்னும் அமல்படுத்தவில்லை. நான் தெளிவாக சொல்லிவிட்டேன். இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு போகட்டும். என்ன இது? இது ரொம்ப அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது?

கேள்வி: நீங்கள் சொல்வதின் அர்த்தம் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?

ரஜினி: அது போராட்டம் என்று இல்லைங்க… அது உன்மையில் வன்முறையாக ஆகக் கூடாது. அதற்கு உளவுத்துறை இருப்பது எதற்கு? அமைதி வழியில் போராட்டம் செய்யலாம். வன்முறைக்கு இடம் கொடுக்கக் கூடாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Rajinikanth delhi protest central government intelligence failure rajini condemn centre

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X