ரஜினிகாந்த் மன்றம் வெப்சைட் : 10 லட்சம் ‘ஹிட்’களை தாண்டியது

ரஜினிகாந்த் மன்றம் வெப்சைட், ஒரே நாளில் 10 லட்சம் ‘ஹிட்’களை தாண்டியது. இதுவரை மன்றத்தில் இல்லாத பலரும் புதிதாக உறுப்பினர்களாக இணைகிறார்கள்.

ரஜினிகாந்த் மன்றம் வெப்சைட், ஒரே நாளில் 10 லட்சம் ‘ஹிட்’களை தாண்டியது. இதுவரை மன்றத்தில் இல்லாத பலரும் புதிதாக உறுப்பினர்களாக இணைகிறார்கள்.

ரஜினிகாந்த், ‘அரசியலுக்கு வருவது உறுதி. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ரஜினி மன்றம் என்ற பெயரில் வெப்சைட் (rajinimandram.org) தொடங்குவதாக கூறினார்.

ரஜினி மன்றம் வெப்சைட்டில் ஏற்கனவே மன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும், இதுவரை அதிகாரபூர்வமாக ஒருங்கிணைக்கப்படாத ரசிகர்களும் மாற்றத்தை விரும்பும் மக்களும் தங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்யலாம் என ரஜினிகாந்த் கூறினார். மேலும் ரஜினி மன்றம் செயலியை (ஆப்) டவுன்லோடு செய்து, அதிலும் பதிவு செய்யலாம் என குறிப்பிட்டார்.

ரஜினிகாந்தின் இந்த வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ரஜினி மன்றம் வெப்சைட்டை மொய்க்க ஆரம்பித்தனர். வேறு கட்சிகளில் பொறுப்பில் இல்லாத, அரசியல் ஆசையில் உள்ள வேறு பலரும் ரஜினி மன்ற வெப்சைட்டில் பெருமளவில் பெயர்களை பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது. தவிர, மாற்றுக் கட்சிகளில் பொறுப்பில் இருந்த ரஜினி ரசிகர்களும் தங்கள் பெயர்களை பதிவு செய்கிறார்கள்.

ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் டிசம்பர் 2-ம் தேதி மாலையில் வெளியிட்ட தகவல் அடிப்படையில், ஒரே நாளில் ரஜினி மன்ற வெப்சைட்டில் 1மில்லியன் (10 லட்சம்) நபர்கள் நுழைந்திருக்கிறார்கள். இணையத்தில் அரசியல் ரீதியாக ஒரு மாநில அளவிலான அரசியல் நடவடிக்கைக்கு ஒரே நாளில் இவ்வளவு ‘ஹிட்’ கிடைத்திருப்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

ரஜினி மன்றம் செயலி மூலமாகவும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வேகத்தில் சென்றால், ரஜினி தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடும் முன்பாகவே பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி மன்றத்திற்கு ஒரே நாளில் ஒரு மில்லியன் ஹிட் கிடைத்ததை இணையத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close