சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, இன்று ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அரசியல் அறிவிப்புக்கு பின், ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இறுதியில், பலத்த வரவேற்புக்கிடையே பேச ஆரம்பித்த ரஜினிகாந்த் தன்னைச் சுற்றி சுழலும் பல கேள்விகளுக்கு நேரிடையாக பதிலளித்தார்.

ரஜினி பேசியதாவது, “கல்லூரி விழா என்று நினைத்தால் இது கட்சி மாநாடு போல உள்ளது, அரசியல் பேசக்கூடாது என நினைத்தேன். ஆனால், பேசக்கூடிய சூழல் உள்ளது. எனவே, கொஞ்சமாக பேசி விடுகிறேன். நான் வரும்போது சாலைகளில் ரசிகர்கள் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைத்துள்ளீர்கள். இனி அப்படி கூடாது.

எனது அரசியல் வருகை குறித்து பல்வேறு கருத்துக்களை அதிகம் பேர் கூறிவருகின்றனர். அவர்களிடம் நான் வாழ்த்துக்களை எதிர்பார்க்கவில்லை, ஆனால் இழிவுபடுத்தாதீர்கள்.

எனக்கும், எம்ஜிஆருக்கும் இடையோன உறவை கூற விரும்பினேன், ஆனால் காலம் அமையவில்லை.  சினிமாவில் எம்ஜிஆருக்கு போட்டி சிவாஜி, அரசியலில் கலைஞர். கலைஞர் போன்று அரசியல் ஞானி இல்லை, பேச்சாளார், எழுத்தாளர் இல்லை. கலைஞர் போல் ராஜதந்திரி இல்லை. அவரையே 12 ஆண்டுகள் அரியணை பக்கம் திரும்ப விடாமல் செய்தார் எம்ஜிஆர். அவரின் நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும். அரசியலுக்கு யார் வந்தாலும் எம்ஜிஆராக முடியாது. நான் தற்போது வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க காரணமானவர் எம்ஜிஆர். ராகவேந்திரா மண்டபம் அமைய காரணமானவர் எம்ஜிஆர் தான்.

நான் என் வேலையை சரியாக செய்து வருகிறேன், 1996 முதல் அரசியல்வாதிகள் அவர்களது வேலையை சரியாக செய்யவில்லை. மக்களுக்கு நான் கடமை செய்ய வேண்டியுள்ளதால் தான், நான் அரசியலுக்கு வந்தேன்.

அரசியல் பாதை எனக்கும் தெரியும், பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை. தமிழகத்தில் தற்போது வெற்றிடம் உள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி என மாபெரும் தலைவர்கள் இல்லாத இந்த சூழலில் தமிழகத்திற்கு தலைமை தேவைப்படுகிறது.

இனிமேல்தான் பார்க்க போகிறீர்கள் ஆன்மீக அரசியல் என்னவென்று. மாணவர்கள் அரசியல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், ஆனால் அரசியல் வேண்டாம். படிப்புதான் முக்கியம். அப்துல்கலாம், சுந்தர்பிச்சையால் தமிழுக்கு பெருமை. மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள், அதுதான் முக்கியம். தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும்” என்றார்.

×Close
×Close