பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ரஜினிகாந்த் திட்டம்?

அதிமுக-வின் இரு அணிகளை தன் பக்கம் இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழக அரசியலில் ரஜினி இறங்குவாரா என தற்போதுவரை சர்ச்சைகளும், விவாதங்களும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ரஜினிகாந்த் அரசியலில் இறங்கி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால், ரஜினியோ அரசியலில் இறங்குவது குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் ட்விஸ்ட் வைத்து பேசி வருகிறார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ரசிகர்களுடனனான சந்திப்பின் போது ரஜினி பேசும் போது அவர் அரசியலில் இறங்குவது குறித்து முடிவு செய்ததாகவே தெரிகிறது. அப்போது ரஜினிகாந்த் பேசுகையில், சிஸ்டத்தை சேஞ்ச் பண்ணனும், ஜனங்களோட மன ஓட்டத்தை சேஞ்ச் பண்ணனும், ஒரு மாற்றத்தை உண்ணாக்கனும். அப்போ தான் நாடு உருப்படும். அத எல்லோரும் சேர்ந்து பண்ண வேண்டியிருக்கு. இந்த வலைதளங்கள்ல பேசுறத கேட்டெல்லாம் ரசிகர்கள் எதுவும் நினைக்க வேண்டாம். ஏன்னா, எதிர்ப்பிருந்தா தான் நாம வளர முடியும் என கூறியிருந்தார்.

இதன் மூலம் ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவது உறுதியாகிவிட்ட நிலையில், அவர் எப்போது அரசியலுக்குள் வருவார் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. ரஜினியின் இந்த பேச்சைக்கேட்டதும், தமிழக அரசியல் தலைவர்களும் தங்கள் தரப்பில் கருத்துகளை தெரிவிக்க தொடங்கிவிட்டனர். சிலர் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிலர் ஆதரவு தெரிவித்தும் கருத்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த், பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ரஜினிகாந்த்துக்கு பாஜகவில் இருந்து அழைப்பு வந்துள்ளதாம். இது தொடர்பாக பாஜக தரப்பில் இருந்து ரஜினிகாந்தை தொடர்பு கொண்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே நல்ல தொடர்பு உள்ளது. எனவே, ரஜினிகாந்த் அரசியலில் தனது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தலாம் என்று அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.

ஆனால், இது குறித்து தமிழக பாஜக எந்தவித அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை. எனினும், பாஜக-வின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, அதிமுக பிளவுபட்டு இரண்டு அணிகளாக உள்ளது. எனினும் ஆளும் கட்சி(அதிமுக) பாஜக-விற்கு ஆதரவு தரும் நிலையில் தான் இருக்கிறது. பாஜக பிற்காலத்தில் எடுக்கும் அரசியல் தொடர்பான முடிவுகளுக்கு ஆளும் கட்சி ஆதரவு அளிக்கும். ஓபிஎஸ் தரப்பில் குறைந்த பலமே இருக்கும் நிலையில், ஈபிஎஸ் தரப்பில் நல்ல முடிவே எடுக்க நினைப்பார்கள். ஓபிஎஸ்-க்கு வேறு எந்த வழியும் இல்லாத நிலையில், அதிமுக மீண்டும் ஒன்றிணையும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

சமீப காலமாக ஆளும் கட்சி தொடர்பான விஷயங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியன் மூலம் வருமான வரித்துறை, சிபிஐ மூலமாக அரசியல் ரீதியான தாக்குதலை பாஜக கட்டவிழ்த்து விட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை குறிவைத்து, அவர்களை கட்சியில் இருந்து ஓரம் கட்டும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த இருவாரங்களுக்கு முன்னர் பாஜக பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்த்துப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியிலானது அல்ல என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்த போதிலும், பாஜக மற்றும் அதிமுக அணிகளிடையே சுமூகமான போக்கை ஏற்படுத்துவற்காகவே அவர் சந்தித்திருக்கக்கூடும் என பாஜக, அதிமுக வட்டாரத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கினறன.

எனவே, தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்கும் நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருவதாகவும், இதற்காக அதிமுக-வின் இரு அணிகளை தன் பக்கம் இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கும் பட்சத்தில் அவரையும் கூட்டணியில் இணைக்க முயற்சிமேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

×Close
×Close