6 ஜனாதிபதிகளையும் 2 நோபல் வெற்றியாளர்களையும் உருவாக்கியது சென்னை பல்கலைக்கழகம் என பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தார். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று (மே 5) சென்னை பல்கலைக்கழக 160-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுனருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கினார். துணைவேந்தர் டாக்டர் துரைசாமி வரவேற்று பேசினார். துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்தி பேசினர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டங்களை வழங்கினார். இந்த ஆண்டு நேரடியாக பட்டம், பரிசு பெற்றவர்கள் எண்ணிக்கை 572. இதில் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் 2 பேர். 400 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். நேரில் வராமல் பட்டம் பெற்றவர்கள் 77,350 பேர், சர்வதேச சட்ட முதுகலை பட்டப்படிப்பில் மாணவி அபிராமி ஜனாதிபதியிடம் இருந்து தங்கப் பதக்கம் பெற்றார். அவர் மேடையில் அனுபவ உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விழாவில் பேசியதாவது : இன்று பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் பெற்றுள்ள பட்டத்தை தனக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். சென்னை பல்கலைக்கழகம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் அறிவுசார் பெட்டகமாக திகழ்கிறது.
குறிப்பாக தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் தாய் பல்கலைக்கழகமாக திகழ்கிறது. இந்த பல்கலைக்கழகம் 6 ஜனாதிபதிகளையும், 2 நோபல் பரிசு பெற்றவர்களையும் நாட்டுக்கு உருவாக்கி தந்துள்ளது. செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பல விஞ்ஞானிகளையும், பல துறைகளில் முத்திரை பதித்து வரும் சாதனையாளர்களையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளையும் நாட்டுக்கு கொடுத்து பெருமை சேர்த்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் பல உயர்கல்வி துறைகள் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு மிகவும் உறுதுணையாக அமையும். கல்வி நிறுவனங்கள் திறமையான மாணவர்களை உருவாக்கி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் கற்ற கல்வியையும், திறமையையும் பங்களிக்க வேண்டும்.
ஜனாதிபதி மாளிகையை போல் சென்னை பல்கலைக்கழகமும் பழம் பெருமை வாய்ந்தது. ஜனாதிபதி மாளிகை எப்படி அனைவருக்கும் பொதுவானதோ அதே போல் சென்னை பல்கலைக் கழகமும் எல்லோருக்கும் பொதுவானது. ஜனாதிபதி மாளிகைக்கு எல்லோரும் வந்து செல்லலாம். உலகிலேயே தமிழ் மொழி பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இவ்வாறு அவர் பேசினார்.