குட்கா ஊழல்: கடிதத்தை தமிழக அரசு மறைப்பது மன்னிக்க முடியாத குற்றம்: ராமதாஸ்

குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரும் காவல்துறை உயரதிகாரிகள் சிலரும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

குட்கா ஊழல் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இதை தனிவழக்காக விசாரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, குட்கா ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வருமானவரித்துறையிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று மதுரை  உயர்நீதிமன்றக் கிளையில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து வந்த கடிதத்தை தமிழக அரசு மறைப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

குட்கா ஊழலில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரும் காவல்துறை உயரதிகாரிகள் சிலரும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது ஊரறிந்த ரகசியம் ஆகும்.

அந்த அடிப்படையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை நான் வலியுறுத்தியிருந்தேன். வருமானவரித்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தான் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. ஆனால், வருமானவரித் துறை கடிதமே எழுதவில்லை என அரசு கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு வருமானரித்துறை கடிதம் எழுதியதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகின. குட்கா ஆலைகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 12-ஆம் தேதி தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் இராமமோகன்ராவை கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த வருமானவரித்துறையின் புலனாய்வுப்பிரிவு முதன்மை இயக்குனர் பாலகிருஷ்ணன், குட்கா நிறுவனத்திடமிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.39.91 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருமானவரித்துறை அறிக்கையை அளித்தார். இந்த அறிக்கை அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமாருக்கும் அனுப்பப்பட்டு,  அதை பெற்றதற்கான ஒப்புகையயும் வருமானவரித்துறை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, தலைமைச் செயலருடனான சந்திப்புக்கு அடுத்த நாள், குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவருக்கு வருமானவரித்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையையும் தலைமைச் செயலாளர் அலுவலக மூத்த உதவி நிர்வாக அதிகாரி பாபு என்பவர் அனுப்பிவைத்துள்ளார்.

கையூட்டுத் தடுப்புப் பிரிவு இயக்குனராக இருந்த மஞ்சுநாதா, குட்கா ஊழல் குறித்த ஆதாரங்களை வருமானவரித்துறையிடம் கேட்டபோது அவை தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. அலுவலகத்தில்  ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டதாக பதிலளிக்கப்பட்டிருக்கிறது.

குட்கா ஊழல் தொடர்பாக இவ்வளவு சந்திப்புகளும், கடிதப்போக்குவரத்தும் நடந்துள்ள நிலையில் எதுவுமே நடக்கவில்லை என்று தமிழக அரசு கூறுவது மதுரை உயர்நீதிமன்றத்தை ஏமாற்றும் மோசடியாகும். அரசே இப்படி செய்யக்கூடாது.

மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்ட சேகர் ரெட்டியிடமிருந்து  இப்போதைய முதலமைச்சர், அமைச்சர்கள், சில எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர் கையூட்டு பெற்றது குறித்த சில ஆவணங்களையும் வருமானவரித்துறை தமிழக அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கோரியது.

ஆனால், அதன்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு தாமதித்து வருகிறது. தமிழகத்தையே உலுக்கிய மிக முக்கியமான ஊழலில் சம்பந்தப்பட்ட ஆவணம்  தங்களுக்கு வரவில்லை என்று உயர்நீதிமன்றத்திலேயே பொய் சொல்லும் அளவுக்கு  அரசு சென்றிருப்பதிலிருந்தே, அந்த ஊழலில் தொடர்புடைய அமைச்சரையும், அதிகாரிகளையும் காப்பாற்றுவதற்காக எந்த அளவுக்கும் செல்லும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 

திகட்டத் திகட்ட ஊழல் செய்வது, ஊழலில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவது ஆகியவையே பினாமி அரசின் பணியாக உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு மோசடி செய்திருப்பது செய்திகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இதை தனிவழக்காக விசாரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, குட்கா ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close