ஊழலுக்கு உடன்படாத கல்வித்துறை செயலாளர்களை மாற்றத் துடிப்பதா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கி மீண்டும் ஒரு வசூல் வேட்டை நடத்தத் திட்டமிட்டிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு இது பெரும் ஏமாற்றம்

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையானத் தேவை தரமான கல்வி வழங்குவதாகும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இரு அதிகாரிகளை மாற்றத்துடிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த ஊழல் பாதையில் வெற்றி நடை போடும் பினாமி ஆட்சியில் மறந்தும் கூட நல்லது எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் தான் கல்வித்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளில் பினாமி அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஊழலின் உறைவிடமாக திகழ்ந்த பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக உதயச்சந்திரன் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டதற்கு பிறகு தான் அத்துறை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. பொதுத்தேர்வுகளில் தரவரிசையை ஒழித்தது, 11-ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வை அறிமுகம் செய்தது, பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட உதயச்சந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவார்கள். பினாமி ஆட்சியாளர்களின் ஊழல்களை கடுமையாக விமர்சித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி கூட, உதயசந்திரன் வழிகாட்டுதலில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதை பல நேரங்களில் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உதயச்சந்திரன் பொறுப்பேற்று சரியாக 5 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் அவரை அத்துறையிலிருந்து இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கான காரணம் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு உதயச்சந்திரன் ஒத்துழைக்கவில்லை என்பது தான்.

தமிழ்நாட்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும், 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும் அண்மையில் தரம் உயர்த்தப்பட்டன. இதையடுத்து ஏற்கனவே காலியாக இருந்த இடங்களையும் சேர்த்து 2950 ஆசிரியர் பணியிடங்களை இடமாறுதல் மூலம் நிரப்பட வேண்டிய சூழல் உருவானது.

பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான அரசாணை கடந்த மாதம் 18-ம் தேதி வெளியான நிலையில் அடுத்த சில நாட்களில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்களின் உதவியுடன் முதற்கட்டமாக 700-க்கும் கூடுதலான அதிகாரிகள் நிர்வாக இடமாறுதல் என்ற பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுபற்றி விசாரணை நடத்தக்கோரியும், மாறுதலை ரத்து செய்யக் கோரியும் கடந்த 24-ம் தேதி பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதன்பின்னர் அடுத்தக்கட்ட இடமாறுதல்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அனுமதி அளிக்கவில்லை. நிர்வாக இடமாறுதல் வழங்கப்பட்ட 700 பேரிடமும் தலா 5 லட்சம் வீதம் ரூ.35 கோடி கையூட்டு பெறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக மேலும் பல நூறு ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கி மீண்டும் ஒரு வசூல் வேட்டை நடத்தத் திட்டமிட்டிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இதையடுத்து உதயச்சந்திரன் வளைந்து கொடுக்க மறுப்பதால் கட்சிக்காரர்களுக்கு எந்த நன்மையும் செய்யமுடியவில்லை என்று பினாமி முதலமைச்சரிடம் செங்கோட்டையன் முறையிட்டதாகவும், அதையேற்று உதயச்சந்திரனை இடமாற்றம் செய்ய தலைமைச் செயலாளருக்கு முதலமைச்சர் ஆணையிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் உயர்கல்வித்துறை செயலாளருக்கும் இடமாற்ற ஆணை தயாராகி வருகிறது. உயர்கல்வித் துறை செயலாளராக உள்ள சுனில்பாலிவாலின் கடந்த கால செயல்பாடுகள் விமர்சனத்துக்குரியவை தான் என்றாலும் கூட, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆசிரியர்களை நியமிப்பதில் நடந்த ஊழல்களை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அதன் துணைவேந்தர் கணபதி மீது விசாரணை நடத்த சுனில் பாலிவால் ஆணையிட்டார். அதேபோல், பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை ஆணையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வருகிறார்.

பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் மீண்டும் அப்பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக வருவதற்கு இந்த விசாரணை தடையாக இருக்கும் என்பதால் அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே 2 முறை துணைவேந்தராக இருந்த அவருக்கு முதலமைச்சரும், உயர்கல்வித் துறை அமைச்சரும் ஆதரவாக உள்ளனர்.

அதேபோல் பல்கலைக்கழகங்களில் கட்டிடங்களை கட்டுவது, பிற பொருட்களை கொள்முதல் செய்வது உள்ளிட்ட பணிகளில் தான் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடப்பதால் அதைத் தடுக்கும் வகையில் அவை குறித்த துணைவேந்தர்களின் அதிகாரத்தை பறிக்க பாலிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கோடிகளை கொட்டிக்கொடுத்து துணைவேந்தரான பலரும் இந்த நடவடிக்கையால் தங்களின் வருமானம் பாதிக்கப்பட்டு விடுமே என்ற அச்சத்தில் பாலிவாலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியதாகவும், அதை பினாமி ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையானத் தேவை தரமான கல்வி வழங்குவதாகும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இரு அதிகாரிகளை மாற்றத்துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும். உதயச்சந்திரனை இடமாற்றம் செய்வதால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால், பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட கல்வி வளர்ச்சி சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். எனவே, கல்வித்துறையின் இரு செயலர்களையும் இடமாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close