சித்தராமையாவை சந்திப்பது தமிழக உரிமைகளை தாரை வார்க்கும் செயல்! – ராமதாஸ்

தமிழக முதலமைச்சர், கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரி நீருக்காக கெஞ்சப் போவதாக கூறியிருக்கிறார். இதனால் ஒரு பயனும் இல்லை

By: January 31, 2018, 2:14:19 PM

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வாடும் சம்பா பயிரைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி வலியுறுத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவை நேரில் சந்தித்துப் பேச தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது மிகவும் தவறான அணுகுமுறையாகும். காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்க்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

மேட்டூர் அணை மிகவும் தாமதமாக அக்டோபர் மாதத்தில் திறந்து விடப்பட்டதால், காவிரிப் பாசன மாவட்டங்களில் அம்மாத இறுதியிலும், நவம்பர் மாதத்திலும் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிக் கொண்டிருக்கின்றன. நிலத்தடி நீரைப் பயன்படுத்தி முன்கூட்டியே பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடையாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஆற்று நீரை நம்பியவர்களின் நிலைமை மிகவும் மோசமாகியிருக்கிறது. சில பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கும், வேறு சில இடங்களில் இரு வாரங்களுக்கும் காவிரி நீர் தேவைப்படுகிறது. தண்ணீர் எளிதில் சென்றடையாத ஊர்களில் இன்னும் கூடுதலான நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. அடுத்த இரு வாரங்களுக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் சம்பா நெற்பயிர்களை முழுமையாக காப்பாற்றியிருக்க முடியும்.

தமிழக ஆட்சியாளர்களுக்கு இந்த உண்மை முன்கூட்டியே தெரிந்திருக்கும் என்பதால் சம்பா பயிரைக் காப்பாற்றத் தேவையான தண்ணீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் முன்கூட்டியே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், பிரதமருக்கு ஒரு முறையும், கர்நாடக முதலமைச்சருக்கு ஒரு முறையும் கடிதம் எழுதி விட்டு, அத்துடன் கடமை முடிந்ததாக ஆட்சியாளர்கள் ஒதுங்கி விட்டனர். அதுமட்டுமின்றி, கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை படிப்படியாக கட்டுப்படுத்தி, கடந்த 25ம் தேதி வினாடிக்கு 1250 கனஅடியாக குறைத்த தமிழக அரசு, 28-ஆம் தேதி மாலை அணையை மூடிவிட்டது. உழவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் அணையை மூடிய ஆட்சியாளர்கள் தான் சம்பா பயிரைக் காப்பாற்ற கர்நாடக முதலமைச்சரை சந்தித்து தண்ணீர் கேட்கப் போவது போல நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகம் ஆண்டுக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் இதுவரை 112 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் வந்துள்ளது. மீதமுள்ள 80 டி.எம்.சி நீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தரும்படி காவிரி மேற்பார்வைக் குழுவிடம் தமிழகம் முறையிட்டிருக்க வேண்டும். அதனடிப்படையில் காவிரி மேற்பார்வைக்குழு எடுக்கும் முடிவை கர்நாடகம் செயல்படுத்துவதை உறுதி செய்யும்படி பிரதமருக்கு தமிழகத்தின் சார்பில் அரசியல் அழுத்தம் கொடுத்து சாதித்திருக்க வேண்டும். அது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கு அடையாளமாகும். அவ்வாறு அழுத்தம் கொடுத்தால் தமிழகத்திற்கு குறைந்த அளவாவது தண்ணீர் கிடைத்திருக்கும்.

ஆனால், பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ பிரதமருக்கு ஒரு முறை கடிதம் எழுதிவிட்டு, தொடர் அழுத்தம் கொடுக்காமல், கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம் எழுதத் தொடங்கினார். ஆனால், காவிரியில் தண்ணீர் தர முடியாது என அப்போதே சித்தராமய்யா கூறி விட்ட நிலையில், பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவது, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டாலும் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவை வழங்கியிருக்கும்.

பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தின் தண்ணீர் உரிமையை உறுதி செய்யும்படி வலியுறுத்துவதற்கு அஞ்சும் தமிழக முதலமைச்சர், கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரி நீருக்காக கெஞ்சப் போவதாக கூறியிருக்கிறார். இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அடுத்த சில மாதங்களில் கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க சித்தராமய்யா முன்வர மாட்டார். மாறாக, காவிரிப் பிரச்சினைக்கு தொடர்ந்து பேச்சு நடத்தி தீர்வு காணலாம் என்று தூண்டில் போடுவார். ஒரு முறை பேச்சு நடத்தியதைக் காரணம் காட்டி, நடுவர் மன்றத் தலையீடோ, நீதிமன்றத் தலையீடோ தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கூறி, நாம் போராடிப் பெற்ற உரிமைகளை முடக்க சித்தராமய்யா முயல்வார். இது காவிரிப் பிரச்சினையில் 30 ஆண்டு பின்னடைவை ஏற்படுத்தும்.

இதற்கெல்லாம் மேலாக கர்நாடக சட்டப்பேரவையில் 2018-19ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் 16- ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன் தமிழக முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பில்லை என்று கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதனால் 16-ஆம் தேதிக்குப் பிறகு தான் சந்திப்பு நடைபெறக்கூடும். ஒருவேளை அதன் பின்னர் தண்ணீர் திறக்கப்பட்டால் கூட அதற்குள் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படாது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது தான் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும். மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூலம் தண்ணீர் பெறுவது தான் தற்காலிகத் தீர்வாகும். இவற்றை விடுத்து கர்நாடகத்துடன் பேச்சு நடத்துவது கூடவே கூடாது. இன்று காலை நிலவரப்படி கர்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் 34.97 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இதைக்கொண்டு தமிழகத்திற்கு அடுத்த ஒரு மாதத்திற்கு தண்ணீர் வழங்க இயலும் என்பதால், உடனடியாக அனைத்துக் கட்சிக் குழுவுடன் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தி சம்பா பயிரைக் காக்க தண்ணீர் பெற தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் 14.40 டி.எம்.சி தண்ணீர் இருப்பதால் இடைக்கால ஏற்பாடாக அடுத்த சில நாட்களுக்கு அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடவும் தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ramadoss forces cm edappadi palanisamy for not to meet siddaramaiah

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X