Advertisment

மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு: மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு பறிப்பு - ராமதாஸ்

40 விழுக்காடு முதல் 50 விழுக்காடு கால் ஊனமுற்ற ஏராளமான மாணவர்களின் விண்ணப்பங்கள் காரணம் கூறாமல் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு: மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு பறிப்பு - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப்பிரிவு கலந்தாய்வில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படாமல் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. தகுதியுடையோர் நிராகரிக்கப்பட்டு, தகுதியற்றோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

Advertisment

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 3382 இடங்கள் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4%, அதாவது 122 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 5 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 117 இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த இடங்களுக்கு தகுதியான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது உண்மையல்ல. மாறாக, தகுதியுடைய மாணவர்கள் ஏராளமாக இருந்தும் அவர்களில் பலரின் விண்ணப்பங்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பல மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட போதிலும், கலந்தாய்வின் போது அவர்களுக்கு மருத்துவ இடம் ஒதுக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் 122 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும் கூட 58 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்திருந்ததாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆனால், அவற்றில் 20 மாணவர்களின் விண்ணப்பங்களைத் தவிர மீதமுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகவல் குறிப்பின் 25&ஆவது பக்கத்தில் 50% முதல் 70% வரை கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் இல்லாத பட்சத்தில் 40% முதல் 50% வரை கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், 40 விழுக்காடு முதல் 50 விழுக்காடு கால் ஊனமுற்ற ஏராளமான மாணவர்களின் விண்ணப்பங்கள் காரணம் கூறாமல் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 20 மாணவர்களில் 5 பேரைத் தவிர மீதமுள்ளவர்களுக்கு கை ஊனம் இருப்பதாகக் கூறி வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. 40 விழுக்காட்டுக்கும் கூடுதலான உடல் பாதிப்பு மட்டுமே ஊனமாக கருதப்பட வேண்டும். கைகளில் சிறு குறைபாடு இருந்தாலும் கூட அவர்களால் மருத்துவம் சார்ந்த பணிகளை இயல்பாக மேற்கொள்ள முடியுமானால் அவர்களை மருத்துவப் படிப்பில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், சிறு குறைகளைக் காரணம் காட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பை மறுப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதைத் தவிர வேறல்ல.

விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசையை தயாரிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க 80 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 56 பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில் 14 பேரைத் தவிர மீதமுள்ள 42 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

தேசிய அளவிலாக போட்டித் தேர்வை எதிர்கொள்ள எந்த வகையிலும் தயாராக கிராமப்புற ஏழை மாணவர்கள் மீது நீட் எனப்படும் போட்டித் தேர்வை கட்டாயப்படுத்தித் திணித்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை மத்திய அரசு பறித்தது. அதனால் ஏற்பட்ட தடைகளையும் தாண்டி வந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இல்லாத காரணங்களைக் கூறி மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பறிப்பது எந்த வகையிலும் சரியல்ல. இத்தகையப் போக்கு தொடர்ந்தால் தமிழ்நாட்டில் ஊர்ப்புற, ஏழை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகிவிடும்.

எனவே, மாற்றுத்திறனாளி மற்றும் விளையாட்டுப் பிரிவு மாணவர்களின் விண்ணப்பங்களை மீண்டும் ஆய்வு செய்து, தனிக் கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Neet Anbumani Ramadoss Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment