தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டம் தேவை : ராமதாஸ் கோரிக்கை

கோவைக்கு பதிலாக விருதுநகர் மாவட்டம் இப்பட்டியலில் இணைந்திருக்கிறது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதி மற்றும் சமூக சமத்துவம் குறித்து உரக்கப் பேசும் தமிழகத்தில் தான் சில குறிப்பிட்ட மாவட்டங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. தமிழகத்தின் இந்த அவல நிலையை 2017-ஆம் ஆண்டிற்கான மனித வாழ்நிலை மேம்பாட்டு அறிக்கை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. வறுமை, நோய், கல்லாமையை ஒழிப்பதில் அரசின் தோல்வியை இது காட்டுகிறது.

மனித வாழ்நிலை மேம்பாட்டு அறிக்கை
தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களின் மனித வாழ்நிலை எவ்வாறு உள்ளது என்பது சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வாழும் மக்களின் தனிநபர் வருமானம், மனித ஆயுள்காலம், எழுத்தறிவு விகிதம், பள்ளிப்படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்பட்டிருக்கிறது.

இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட தரவரிசையில் கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அரியலூர், பெரம்பலூர், தேனி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் கடைசி 5 இடங்களைக் கைப்பற்றியிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடைசி 5 இடங்கள்
14 ஆண்டுகளுக்கு முன் 2003-ஆம் ஆண்டில் முதன்முதலாக தமிழகத்தின் மனிதவாழ்நிலை மேம்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்ட நாளில் இருந்தே இதேநிலை தான் தொடருகிறது. 2003-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் தருமபுரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் தான் கடைசி 5 இடங்களைப் பிடித்திருந்தன.

திருநெல்வேலி சற்று முன்னேறியுள்ளது
அவற்றில் விழுப்புரம், பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட அரியலூர் ஆகிய மாவட்டங்கள் இன்னும் பட்டியலில் கடைசி 5 இடங்களில் இருந்து முன்னேறவில்லை. தருமபுரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் சற்று முன்னேறியிருந்தாலும், திருநெல்வேலி தவிர மற்ற இரு மாவட்டங்களும் கடைசி 10 இடங்கள் பட்டியலில் தன் முடங்கிக் கிடக்கின்றன.

முதல் 5 இடங்களில் விருதுநகர்
அதேபோல், 14 ஆண்டுகளுக்கு முன் முதல் 5 இடங்களைப் பிடித்திருந்த கன்னியாக்குமாரி, தூத்துக்குடி, கோவை, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கோவை தவிர மீதமுள்ள 4 மாவட்டங்களும் தங்களின் இடங்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. கோவைக்கு பதிலாக விருதுநகர் மாவட்டம் இப்பட்டியலில் இணைந்திருக்கிறது.

ஆட்சியாளர்களின் செயல்பாடு
கடந்த 14 ஆண்டுகளில் கல்வி, மருத்துவம், தனிநபர் வருமானம் ஆகியவை தொடர்பான விஷயங்களில் தமிழக ஆட்சியாளர்கள் எந்தவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

கடைசி 10 இடங்களும், பொதுத்தேர்வு முடிவுகளும்
இந்தப் பட்டியலில் கடைசி 10 இடங்களில் உள்ள மாவட்டங்களையும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கடைசி 10 இடங்களில் உள்ள மாவட்டங்களில் பட்டியலையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதைப் பார்க்க முடியும்.

தேனி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் கணிசமாக முன்னேறியிருக்கும் போதிலும் மருத்துவ வசதி, தனிநபர் வருமானம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கியிருப்பதால் தான் மனித வாழ்நிலை மேம்பாட்டு தரவரிசையில் கடைசி 10 இடங்களில் இருந்து இவற்றால் முன்னேற முடியவில்லை.

அரியலூருக்கு அனைத்திலும் கடைசியிடம்
அதிலும் குறிப்பாக அரியலூர் மாவட்டம் மனித வாழ்நிலை மேம்பாட்டை கணக்கிடுவதற்கான அனைத்து காரணிகளிலும் கடைசியில் தான் இருக்கிறது. இந்த நிலையை மாற்ற அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கல்வி, சுகாதாரம், வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தும் வகையில் அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மனிதவாழ்நிலை மேம்பாட்டு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

பட்டியலில் கடைசி 5 இடங்களில் உள்ள மற்ற மாவட்டங்களான பெரம்பலூர், விழுப்புரம், தேனி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அவற்றின் முன்னேற்றத்திற்கு தேவையானவை என்பதை ஆராய்ந்து அவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

சிறப்புத் திட்டங்கள் தேவை
தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த தமிழகம், பின்தங்கிக் கிடக்கும் தமிழகம் என இரு தமிழ்நாடுகள் இருப்பது மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும். இந்த நிலையை மாற்ற மனிதவாழ்நிலை மேம்பாட்டு தரவரிசை, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி விகித தரவரிசைப் பட்டியலில் கடைசி 10 இடங்களில் உள்ள மாவட்டங்களைத் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, அம்மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மத்திய அரசிடம் வலியுத்த வேண்டும்
இதற்காக தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து அதிக நிதியுதவி பெறுவதற்கு வசதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 371 -(K) என்ற புதிய பிரிவு சேர்த்து தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளை இந்த பிரிவின் ஆளுகைக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 371 (2) பிரிவின் கீழ் மராட்டிய மாநிலத்திலும், 371 (D) பிரிவின் கீழ் ஆந்திர மாநிலத்திலும், 371 (J) பிரிவின் கீழ் கர்நாடக மாநிலத்திலும் பிராந்திய அளவிலான முன்னேற்றத் திட்டங்களுக்கு வழி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கும் இந்த சலுகையை மத்திய அரசிடமிருந்து வலியுறுத்திப் பெறுவதில் சிக்கல் இல்லை.

இந்த புதிய அரசியலமைப்புச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி….
1. தமிழகத்தில் பின்தங்கிய பகுதிகளுக்கான சிறப்பு மேம்பாட்டு வாரியம் அமைத்தல்,
2. திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டில் பின்தங்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்தல்,
3. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய மாவட்ட மக்களுக்கு வாய்ப்பளித்தல்
உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி ஒட்டுமொத்த தமிழகத்தின் சமச்சீரான வளர்ச்சிக்கு வகை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close