Advertisment

சர்க்கரைக்கு தட்டுப்பாடு... கரும்பு கொள்முதல் விலையை உயர்த்துக: ராமதாஸ்

ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் ரூ.2850 மட்டுமே வழங்கப் பட்டு வருகிறது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
PMK, Ramadoss, Sugercane

வட மாநிலங்களுக்கு இணையாக சர்க்கரை உற்பத்தி செய்த தமிழகத்தில் இப்போது கரும்பு சாகுபடி இதுவரை இல்லாத வகையில் குறைந்திருக்கிறது. எனவே, கரும்புக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கரும்புக்கு நியாயமான கொள்முதல் விலை வழங்க தமிழக ஆட்சியாளர்கள் தவறியதன் பாதிப்புகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன. முன்னொரு காலத்தில் வட மாநிலங்களுக்கு இணையாக சர்க்கரை உற்பத்தி செய்த தமிழகத்தில் இப்போது கரும்பு சாகுபடி இதுவரை இல்லாத வகையில் குறைந்திருக்கிறது.

கரும்பு சாகுபடியை சிதைத்த அரசின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. 2017-18-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் தமிழகத்தில் 65 லட்சம் டன் அளவுக்கு மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 38 சர்க்கரை ஆலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆலையிலும் ஒரு நாளைக்கு சராசரியாக 5000 டன் கரும்பு அரைக்கப்படுவதாக வைத்துக் கொண்டால், சரியாக 34 நாட்களில் தமிழகத்திலுள்ள அனைத்துக் கரும்பும் அரைக்கப்பட்டு, சர்க்கரையாக்கப்பட்டு விடும்.

ஆண்டுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் இயங்க வேண்டிய சர்க்கரை ஆலைகள் 34 நாட்களில் அனைத்துப் பணிகளையும் செய்து முடித்தால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய முடியாது. சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படக்கூடும்.

தமிழகத்தில் கரும்பு ஒரே இடத்தில் பயிரிடப்படாமல் பரவலாக பயிரிடப்பட்டிருப்பதால் அனைத்து சர்க்கரை ஆலைகளுக்கு 34 நாட்களுக்காவது தடையின்றி கரும்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. ஒருவேளை கரும்பு கிடைக்கவில்லையென்றால், ஆலைகளின் இயக்கம் தடைபடும். இல்லாவிட்டால் வரும் கரும்புக்கு ஏற்றவகையில் ஆலைகளின் அரவைத் திறனை தற்காலிகமாக குறைக்க வேண்டும்.

இந்த இரண்டில் எதைச் செய்தாலும் சர்க்கரை ஆலைகளுக்கு மிகவும் கடுமையான இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, 65 லட்சம் டன் கரும்பைக் கொண்டு 6 லட்சம் டன் சர்க்கரையை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.5 லட்சம் டன் சர்க்கரைத் தேவைப்படும் நிலையில், தமிழகத்தில் நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை 4 மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்திலுள்ள ஆலைகளிடம் இப்போது 5.70 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே இருப்பு உள்ளது. இது 50 நாட்கள் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதற்குள்ளாக சர்க்கரை ஆலைகள் கரும்பு அரவையை தொடங்காவிட்டால் தமிழகத்தில் கடுமையான சர்க்கரைத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் அதன் விலை விண்ணளவுக்கு உயரக்கூடும்.

இதைத் தடுக்க வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்ய சர்க்கரை ஆலைகள் திட்டமிட்டுள்ளன. சர்க்கரைத் தட்டுப்பாட்டை இறக்குமதி மூலம் சரி செய்து விட முடியும் என்றாலும் கூட, இப்படி ஒரு நிலை ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன? என்பதை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2013-14 அரவைப் பருவத்தில் தமிழகத்திலுள்ள சர்க்கரை ஆலைகள் 23.70 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்தன. அந்த ஆண்டில் தமிழகத்தில் 2.60 கோடி டன் அளவுக்கு கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், அது படிப்படியாக குறைந்து இப்போது நான்கில் ஒரு பங்காக குறைந்து விட்டது; கரும்பு சாகுபடி பரப்பும் கடந்த 10 ஆண்டுகளில் 41% குறைந்துள்ளது. 2006-07 ஆம் ஆண்டில் 39.12 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2016-17ஆம் ஆண்டில் 23.73 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது. இவை அனைத்துக்கும் காரணம் கரும்புக்கு போதிய கொள்முதல் விலை வழங்கப்படாதது தான் என்பதை ஆட்சியாளர்களால் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் கரும்புக்கு கட்டுபடியாகும் விலை வழங்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் கரும்பு கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் உழவர்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்திய அரசு அறிவிக்கும் விலையுடன், தமிழக அரசின் பரிந்துரை விலையாக ரூ.650 சேர்த்து வழங்கப்பட்டு வந்தது.

2013- 2014 ஆகிய ஆண்டுகளில் இது டன்னுக்கு தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.200 குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டில் கரும்புக் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. இன்றைய நிலையில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் ரூ.2850 மட்டுமே வழங்கப் பட்டு வருகிறது. பல ஆலைகள் இந்த கொள்முதல் விலையைக் கூட உழவர்களுக்கு தருவதில்லை. இதுதவிர உழவர்களுக்கு தரவேண்டிய ரூ.2,000 கோடியை வழங்காமல் ஆலைகள் இழுத்தடிக்கின்றன.

மேற்கண்ட காரணங்களால் தான் தமிழகத்தில் கரும்பு சாகுபடி குறைந்தது என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து கரும்புக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment