Advertisment

ஜெ., மரணம்: அமைச்சர்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்-ராமதாஸ் வலியுறுத்தல்

ஜெயலலிதாவை கொலை செய்ய சதி நடப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தெரிந்திருந்தால் அதன் மீது அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராமதாஸுக்கு கொலை மிரட்டல் : காடுவெட்டி குருவின் தங்கை மீது வழக்கு

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் அமைச்சர்களையும் சேர்த்து அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை பார்த்ததாகவும், அவர் இட்லி, சட்னி சாப்பிட்டதாகவும் கூறியதெல்லாம் பொய் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தில் ஆயிரம் மர்மங்கள் இருப்பதை அமைச்சரின் பேச்சு உறுதி செய்திருக்கிறது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ள கருத்துக்கள் ஜெயலலிதாவின் மரணத்தில் அவருக்குள்ள தொடர்பு பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாகவே அமைந்திருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டது வரை அனைத்தும் மர்மமாகவே உள்ளது. ‘‘மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, வெங்கய்யா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த போதும் அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டியின் அறையில் அமர்ந்து விசாரித்து சென்றனர். நாங்கள் அவர்களை சுற்றி நின்று ஜெயலலிதா நலமாக இருப்பதாகக் கூறினோம்’’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இவை அனைத்துமே ஏற்கனவே வெளிவந்த உண்மைகள் தான் என்பதால், அமைச்சரின் பேச்சு வியப்பளிக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அவருக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தில் இருந்த மூத்த அமைச்சர் கூறிய தகவல் என்ற வகையில் இந்த உண்மைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை இரு வகைகளில் ஆராய வேண்டியிருக்கிறது. அவரது வார்த்தைகளையே அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், அவர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு துணை போயிருக்கிறார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஜெயலலிதாவை யாராவது சந்தித்தால் தாம் எவ்வாறு கொல்லப்படுகிறேன் என்பதை அவர்களிடம் கூறிவிடுவார் என்ற அச்சத்தின் தான் அவரை யாரும் சந்திக்க விடாமல் சசிகலா குடும்பத்தினர் தடுத்து விட்டனர் என்று அமைச்சர் சீனிவாசன் கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சசிகலா குடும்பத்தினர் தான் ஜெயலலிதாவை கொன்றார்கள் என்பது உண்மை என்றால் அது குறித்து அப்போதே காவல்துறை கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். அது தான் சட்டத்தை மதிக்கும் இந்தியக் குடிமகனின் கடமையாகும். அதுவும் அப்போது அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் அக்கடமையை உடனே செய்திருக்க வேண்டும்.

ஆனால், அவர் அதை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலாவை சந்தித்து அவரது காலில் விழுந்து அதிமுக பொதுச்செயலர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சினார். அதன்பின் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின்னர், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி தமக்கு வழங்கப்பட்டவுடன் சசிகலா கால்களில் விழுந்து வணங்கி அதை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து சசிகலாவின் ஏற்பாட்டில் எடப்பாடி தலைமையில் அமைக்கப்பட்ட அரசில் முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் சேர்ந்து கொண்டார். ஜெயலலிதாவை சசிகலா தான் கொன்றதாக இப்போது கூறும், திண்டுக்கல் சீனிவாசன், தமக்கு அமைச்சர் மற்றும் பொருளாளர் பதவிகளை பெற்றுக் கொண்டு, அந்த உண்மைகளை காவல்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்தார் என்றால் அது ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு துணை போகும் பெருங்குற்றம் தானே? இந்த குற்றத்திற்கான தண்டனை என்ன?

அமைச்சராக பதவியேற்பவர்கள் தங்களுக்குத் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியேற்றுக் கொள்கிறார்கள். அதன்படி, ஜெயலலிதாவை கொலை செய்ய சதி நடப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தெரிந்திருந்தால் அதன் மீது அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் மூலம் அமைச்சராக செய்ய வேண்டிய சில கடமைகளை சீனிவாசன் செய்யத் தவறியிருக்கிறார். இதற்கான தண்டனையையும் அவர் அனுபவித்தாக வேண்டும்.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் தான் பொய்யான தகவல்களை கொடுத்தார் என்று கூற முடியாது. முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் இதே தகவல்களை கூறியுள்ளனர். எனவே, ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் அமைச்சர்களையும் சேர்த்து அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, கடமையை செய்யத் தவறியதுடன் ஜெயலலிதாவின் மரணத்துக்குத் துணை போன திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Jayalalithaa Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment