Advertisment

எமன் வாகனங்களாகும் அரசுப் பேருந்துகள்: ராமதாஸ்

முன்பெல்லாம் அரசுப் பேருந்துகளில் ஏறினால் கவலையின்றி அயர்ந்து உறங்கலாம், பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால்.....

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
எமன் வாகனங்களாகும் அரசுப் பேருந்துகள்: ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

தமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் எதிர்கொண்ட 8 விபத்துக்களில் 29 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்கள் தவிர மேலும் 78 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பினாமி அரசின் அலட்சியமும், பொறுப்பின்மையுமே காரணமாகும்.

திருப்பூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூரை அடுத்த வல்லம் அருகில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கம்பி ஏற்றப்பட்டிருந்த சரக்குந்து மீது பயங்கரமாக மோதியதில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையிலிருந்து கடந்த சனிக்கிழமை திருச்சி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கடலூர் மாவட்டம் ஆவட்டி என்ற இடத்தில் மணல் சரக்குந்து மீது மோதியதில் பேருந்தில் பயணித்தவர்களில் நால்வர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். கும்பகோணம் அருகில் அரசுப் பேருந்தும், சிறிய சரக்குந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 25 பயணிகள் காயமடைந்தனர்.

இந்த சாலை விபத்துக்கள் அனைத்தும் ஜூன் மாத இறுதியிலிருந்து ஜூலை 15-ஆம் தேதி வரையிலான இரு வாரங்களில் நடந்தவை ஆகும். இந்த விபத்துக்கள் அனைத்திலும் உயிரிழந்தவர்கள் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் மட்டுமே. இந்த விபத்துகளுக்கான காரணங்களை ஆராயும் போது, முழுக்க முழுக்க போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியம் தான் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது. கடலூர் மாவட்டம் ஆவட்டி கிராமத்தில் அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதற்கு காரணம் அதன் ஓட்டுனர் திடீரென உறங்கி விட்டது தான். அதேநேரத்தில் இதற்காக அவரைக் குறைக் கூறவும் முடியாது. அந்த ஓட்டுனர் ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னையிலிருந்து திருச்சிக்கு ஓய்வின்றி பேருந்தை இயக்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறார். கடந்த வாரமும் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஓய்வின்றி பேருந்தை ஓட்டியதால் ஏற்பட்ட சோர்வில் கண்ணயர்ந்து விட்டார். அதன்விளைவாக பேருந்தின் நடத்துனர் உட்பட நால்வர் உயிரிழந்து விட்டனர்.

கடந்த 2016-17 ஆம் ஆண்டில் அரசுப் பேருந்துகள் 1209 விபத்துக்களை சந்தித்துள்ளன. இவற்றில் 1,373 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் அரசுப் பேருந்துகள் எதிர்கொண்ட விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவரை மட்டும் 20 விழுக்காட்டுக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளன. அரசுப் பேருந்துகள் எதிர்கொள்ளும் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக அமைந்தவை பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாதது, பிரேக் சரியாக பிடிக்காதது, ஓட்டுனர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவது போன்றவை தான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. செங்கல்பட்டை அடுத்த மேல்மருவத்தூரிலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த எல்லிஸ்பேட்டையில் இரு அரசுப் பேருந்துகள் ஓடும்போதே தீப்பிடித்து எரிந்துள்ளன. இதற்குக் காரணம் பேருந்துகளில் இருந்து எண்ணெயும், எரிபொருளும் கசிவது தடுக்கப்படாதது தான் என்று அரசுப் போக்குவரத்துக்கழகப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களுக்கு போதிய ஓய்வும், நல்ல மனநிலையும் அவசியமாகும். ஆனால், இரவு நேரங்களில் ஓட்டுனர்கள் ஓய்வெடுப்பதற்காகவும், உறங்குவதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் அதற்குத் தகுதியற்றவை ஆகும். இதனால், ஓய்வெடுக்க முடியாமலும், உறங்க முடியாமலும் அடுத்து பேருந்து ஓட்டும் போது ஓட்டுனர்கள் உறங்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மற்றொருபக்கம் பேருந்துகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22,500 பேருந்துகளில் 7000 பேருந்துகள் மட்டுமே இயக்குவதற்கு தகுதியானவை. மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டருக்கும் மேல் ஓடி காலாவதியானவை ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 20 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 7000 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கின்றன. பினாமி ஆட்சியில் தமிழக போக்குவரத்துத் துறை செயல்படும் விதம் இந்த லட்சனத்தில் தான் இருக்கிறது.

முன்பெல்லாம் அரசுப் பேருந்துகளில் ஏறினால் கவலையின்றி அயர்ந்து உறங்கலாம், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற கவலையுடனேயே பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் அரசுப் பேருந்துகளை எமன் வாகனங்களாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். இதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காணப்படும் ஊழலை ஒழித்து, பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment