இந்திய கடலோர காவல் படை தாக்குதல்: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்!

இந்திய கடலோர காவல்படையின் இத்தாக்குதலை கண்டிக்கும் விதமாக, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் விசைப்படகு ஒன்றில் நான்கு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த ராணி அபாக்கா கப்பலில் இருந்த கற்படை வீரர்கள், அவர்களை நோக்கி ரப்பர் குண்டு நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டது.

இந்த தாக்குதலில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சான் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “”இந்திய கடலோர காவல் படையினர், ஹிந்தியில் பேசச் சொல்லி எங்களை அடித்தனர். ஹிந்தி தெரியாது என்று கூறிய போதும் அடித்தனர். அதுமட்டுமில்லாமல், ஹிந்தி தெரியாமல் மீன் பிடிக்க வந்தால், சுட்டுக் கொல்வோம் எனவும் மிரட்டினர்” என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய, இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர், பிச்சை அளித்த புகாரின் பேரில் தமிழக கடலோர காவல்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்திய கடலோர காவல்படையின் இத்தாக்குதலை கண்டிக்கும் விதமாக, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 75,000 மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், ரூ.2 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேசமயம், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்றும், அவர்களை தாக்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்து இந்திய கடலோர காவல்படை அறிக்கை வெளியிட்டிருந்தது. இரட்டை மடி வலையை அந்த மீனவர்கள் பயன்படுத்தியதை திசைத் திருப்பவே, இதுபோன்றதொரு குற்றச்சாட்டை அவர்கள் சுமத்தியுள்ளனர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close