தமிழகத்தில் ஏழைகளுக்கு மட்டும் ரேஷன் அரிசி: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

இனி வரும் காலங்களில் இலவச ரேஷன் அரிசி வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பவர், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அவரை, அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சவுஜன்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு, கடந்த 10 ஆண்டுகளில் ரேஷன் அரிசி கடத்தலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கடந்தாண்டு மட்டும் இலவச அரிசி திட்டத்திற்காக 2110 கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 31 அரசு ஊழியர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, ஏழை மக்களுக்கு மட்டுமே பயன் பட வேண்டிய இந்த திட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் செயல்படுத்தப் படுவதால், மக்களின் வரி பணம் வீணடிக்கப்படடுவதாக தெரிவித்த நீதிபதிகள், இனி வரும் காலங்களில் இலவச ரேஷன் அரிசி வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

2110 கோடி பணத்தை கொண்டு மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியிருந்தால், அனைவரும் பயனடைந்து இருப்பார்கள் எனவும் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் லாபத்திற்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி விட்டதாக அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகை குறித்தும் அவர்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட்டால் ஆகும் செலவு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close