ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் தயார் : மத்திய பார்வையாளர் தமிழகம் வருகை!

சென்னை கோட்டையில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இதையொட்டி மத்திய பார்வையாளர் தமிழகம் வந்திருக்கிறார்.

சென்னை கோட்டையில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இதையொட்டி மத்திய பார்வையாளர் தமிழகம் வந்திருக்கிறார்.
இந்திய ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பா.ஜ.க. சார்பில் பீகார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் போட்டியிடுகிறார்கள். நாடாளுமன்றத்தின் இரு அவை எம்.பி.க்களும், அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்களும் இதில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
நாடாளுமன்ற ஹாலிலும், அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற வளாகங்களிலும் ஜூலை 17-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வசதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற வளாகத்தில் குழுக்கள் கூடும் அறையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டுகள் ஆகியன தயார் நிலையில் உள்ளன.
வாக்குப்பதிவு மையத்தை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி நேரில் பார்வையிட்டார். தவிர, டெல்லியில் இருந்து மத்திய தேர்தல் பார்வையாளரான அன்சூ பிரகாஷ், ஜூலை 15-ம் தேதி வந்து சேர்ந்தார். வாக்குப்பதிவு முறை குறித்து ஏற்கனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் வழங்கும் பேனா மூலமாக மட்டுமே ‘டிக்’ செய்யவேண்டும் என்பது முக்கியமான விதிமுறை.
இந்த தேர்தலில் கட்சி கட்டுப்பாடை வலியுறுத்தும் விதமாக எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கும் நடைமுறை கிடையாது. முழுக்க மறைமுக வாக்குப்பதிவுதான். ஒருவர் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்? என்பதை கண்டறிவது சிரமம்.
தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல்கள் நிலவுவதால், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்சி கட்டளையை மீறி வாக்களிக்கும் வாய்ப்புகளும் இருப்பதாக சொல்கிறார்கள். குறிப்பாக சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே அறிவித்தபடி மொத்தமாக பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களிப்பார்களா? என்கிற கேள்வி இருக்கிறது.
17-ம் தேதியே வாக்குப்பதிவு முடிந்தாலும், ஜூலை 20-ம் தேதிதான் வாக்குகள் எண்ணப்படும். எனவே அன்றுதான் புதிய ஜனாதிபதி யார்? என்பது தெரியவரும். எந்தெந்த மாநிலங்களில் எத்தனை வாக்குகள் அணி மாறி விழுந்தன? என்கிற தகவலும் அப்போது தெரியவரும்.

×Close
×Close