Advertisment

ஆர்.கே.நகரில் திமுக.வுக்கு 8 கட்சிகள் ஆதரவு : இடதுசாரிகள் இடையே பிளவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் இடையே பிளவு ஏற்பட்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் மட்டும் திமுக.வை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
rk nagar, aiadmk, E.Madhusudhanan, jeyalalitha, dmk, CPI, CPM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் இடையே பிளவு ஏற்பட்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் மட்டும் திமுக.வை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது.

Advertisment

சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. வேட்புமனுத் தாக்கல் இன்று (நவம்பர் 27) தொடங்கியது.

ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ ஜனநாயக கட்சி, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய 7 கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்தன.

8-வது கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை இன்று வெளியிட்டது. அந்தக் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பொதுவாக தேர்தல் நிலைப்பாடை இந்திய கம்யூனிஸ்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் இணைந்து எடுப்பது வழக்கம்! ஆனால் தமிழகத்தில் தற்போது அந்த நிலை இல்லை.

ஏற்கனவே கடந்த ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும், ‘தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் உடன்பாடு இல்லை’ எனக் கூறி தங்கள் கட்சி பிரமுகர் லோகநாதனை வேட்பாளராக நிறுத்தியது.

இந்த முறை ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் ஆதரவை திருமாவளவன் தெரிவித்தார். அவரை தொடர்ந்து பாஜக எதிர்ப்பு என்ற அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டும் அதே நிலைப்பாடை எடுத்துள்ளது.

ஆனால் இன்று தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கூட்டத்தில், ‘திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளில் இருந்தும் விலகியிருக்கும்’ முடிவை கட்சி நிர்வாகிகள் வெளிப்படுத்தினர். இதையே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாக எடுக்க இருக்கிறார்கள். அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை பாஜக.வை எதிர்ப்பதைப் போலவே காங்கிரஸை எதிர்க்கும் நிலையிலும் உறுதியை கடைபிடிக்க வேண்டும் என அகில இந்திய அளவில் முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையிலும் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். கடந்த முறையைப் போலவே மார்க்சிஸ்ட் சார்பில் தனியாக வேட்பாளரை நிறுத்தவும், மதிமுக, த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கேட்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

மதிமுக.வின் நிலைப்பாடை வருகிற 1-ம் தேதிக்கு பிறகு அறிவிக்க இருப்பதாக வைகோ கூறியிருக்கிறார். ஸ்டாலின் நேரில் வைகோவை சந்தித்து ஆதரவு கேட்டால் திமுக.வை ஆதரிப்பது என்றும், இல்லாதபட்சத்தில் தேர்தலை புறக்கணிக்கவும் வைகோ விரும்புவதாக தெரிகிறது. தே.மு.தி.க. தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துவிட்ட நிலையில், த.மா.கா.வும் அதே நிலைப்பாடை எடுக்க இருக்கிறது.

அதிமுக.வுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆதரவு கொடுக்காமல் ஒதுங்கியிருக்கிறது. மற்ற சிறு கட்சிகளின் நிலைப்பாடு இனிதான் தெரிய வரும்.

 

Mk Stalin Dmk Cpm E Madhusudhanan Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment