‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்பது ஊரறிய நடந்த குற்றம்’ என கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
‘ஆனந்த விகடன்’ வார இதழில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற கட்டுரைத் தொடரை எழுதி வருகிறார் கமல்ஹாசன். இன்று வெளியான தொடரில், “ஆ.கே.நகர் இடைத்தேர்தல், ஆகப்பெரிய களங்கம். தமிழகத்துக்கு, தமிழக அரசியலுக்கு, அவ்வளவு ஏன், இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம். அதுவும் வெளிப்படையாக நடந்த, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியை ஊழல் என்றுகூட சொல்லமாட்டேன்.
ஊழல் என்பது, பூசி மெழுகுவது போன்ற ஒரு விஷயம். இது அனைவரும் அறிந்த, ஊரறிய நடந்த குற்றம். இவ்வளவு வெளிப்படையாக நடக்கும் குற்றத்துக்கு, மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய சோகம். இது வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வீழ்ச்சி.
‘முதல்வர் தொடங்கி போர்ட்ஃபோலியோவில் கடைசிக்கட்ட அமைச்சர்வரை ஒவ்வொருவரும் இத்தனை வாக்காளர்களுக்கு, தலைக்கு இவ்வளவு கொடுக்கவேண்டும்’ என்று தொகை நிர்ணயித்து அதைக் கச்சிதமாகச் செயல்படுத்தியும் காட்டியதற்கான ஆதாரம் ஊடகங்களில் வெளியானது. அதனால் நின்ற இடைத்தேர்தல் மீண்டும் நடப்பதற்குள் ஆட்கள், அணிகள், சின்னங்கள் இடம்மாறினர்.
நின்ற தேர்தல் மீண்டும் நடந்தபோது, ஆளும் தரப்பு ஆறாயிரம், யாருடைய தயவும் இன்றி சுயமாகவே வளர்ந்த (!) சுயேச்சை தரப்பு இருபதாயிரம் என்று… ஆர்.கே. நகரின் ஒவ்வொரு வாக்காளருக்கும் இருதரப்பும் விலை நிர்ணயித்தன. தங்களின் தலைக்கு அதிக விலை நிர்ணயித்த சுயேச்சையை, ‘தங்களின் தேவைகளைத் தீர்க்க வந்த தேவன் வந்துவிட்டான்’ என்று பொத்தானை அழுத்தி, தங்களுக்குத் தாங்களே உலைவைத்துக்கொண்டுள்ளனர் ஆர்.கே.நகர் வாசிகள்.
இந்த வெற்றியில் பலருக்கும் எழும் கேள்விகள்போல் எனக்கும் பல கேள்விகள். கேட்கிறேன், பதிலிருந்தால் பகிருங்கள். முதல் கேள்வி. என்னைவிட அதீத அரசியல் அறிவுள்ள சாமிகள், ஆசாமிகள் எல்லாம் ‘அடடா, ஒரு கலியுக வரதன் வந்துவிட்டார். ஒரு கல்கி அவதாரம் வந்துவிட்டது, இதுவரை நிகழாதது நிகழ்ந்துவிட்டது’ என்று பாராட்டுகிறார்கள். ‘நாங்கள் பார்க்காத சிறைக்கூடங்களா, ரெய்டுகளா’ என்ற சுயேச்சையின் பதிலில் மயங்கிய என் ஊடக நண்பர்கள்கூட, ‘என்ன ஒரு நெஞ்சுரம், என்ன ஓர் ஆளுமை, இன்னொரு தலைவர் கிடைத்துவிட்டார்’ என்றும் போட்டிபோட்டுக்கொண்டு பாராட்டுகிறார்கள்.
சில அரசியல் அறிஞர்களும், ‘ஆஹா… இவைதாம் வெற்றிக்கான வியூகங்கள்’ என்றும் பட்டியல்போட்டுப் பாராட்டுகிறார்கள். அவற்றில், ‘இருபதாயிரம் ரூபாய் அமவுன்ட்டுக்கான டோக்கனா இருபது ரூபாய் நோட்டையே கொடுத்து ஜெயிச்சார் பார்யா’ என்ற பார்புகழும் பாராட்டும் குறிப்பிடத்தகுந்தது.
இப்படி ஆகப்பெரிய அவமானம் எந்தப் புள்ளியில் கொண்டாட்டமாக மாறுகிறது என்பதுதான் எனக்குப் பிடிபடாத கேள்வி. இதுதான் புதிய புரட்சி என்றால், இன்றைய தேதி வரையிலும் நாம் பிரிட்டிஷின் காலனி ஆதிக்கத்திலேயே வாழ்ந்திருக்கலாமே, எதற்கு அந்தப் பழைய சுதந்திரப் புரட்சி? ‘ரோடு போடுறான், ரயில் விடுறான். அது போதும் சார் நமக்கு. வைரம்தானே… கோகினூர் வைரம்தானே… சுரண்டிக்கொண்டு போகட்டும். நாம அவன் தர்ற ரோடு, ரயில்களை வெச்சுக்கிட்டு அடிமைகளா வாழ்ந்துட்டுப் போயிடலாமே’ என்கிற அதே பழைய குணாதிசயம் நல்லதா?
அன்றைய ரயில், ரோடுகள்… இன்றைய 20 ரூபாய் டோக்கன்களாக மாறி நிற்கின்றன. கோகினூர் வைரம் போன்ற நம் ஜனநாயகம் சுரண்டப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆமாம், அன்றைய கிழக்கிந்திய காலனியை ஒத்த நிலைமைக்குத்தான் தமிழகம் மறுபடியும் வந்திருக்கிறது. இதைச்சொன்னால், ‘இந்த வேகம், அந்த வியூகத்துக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீர்கள் சார்’ என்று, குற்றத்தையே என் தகுதியின்மையாக மாற்றப் பார்க்கிறார்கள் சில நண்பர்கள்.
அடுத்த கேள்வி, அந்த தேவதூதனைத் தேர்ந்தெடுத்த ஆர்.கே.நகர் மக்களுக்கு… உங்கள் உள்ளம் எவ்வளவு அழகான உலகம். உங்களின் அன்பும் அதன் வெளிப்பாடான நெகிழ்வும் என்ன செய்யும் என்பதைச் சென்னை வெள்ளத்தில் உங்களின் உதவிகள் மூலம் இந்த உலகத்துக்குக் காட்டினீர்களே, அப்படிப்பட்ட நீங்கள்தாம் இன்று 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலைபோயுள்ளீர்கள். இது பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம். அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பதுபோன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா?
உங்களிடத்தில் மனிதம் இல்லாமல் இல்லை. ஆனால், வறுமை உங்களின் மனிதம் மறைத்து அந்தப் புள்ளியை நோக்கி நகர்த்துகிறது. உங்களின் வறுமையை இல்லாமல் செய்ய, உங்களின் நேர்மையான வாக்குகள்தாம் ஒரே ஆயுதம். இந்த ஆயுதம் வேண்டுமானால் நீங்கள் பெற்ற டோக்கன்களைப்போல் இன்ஸ்டன்ட் இன்பம் அளிக்காமல் இருக்கலாம். ஆனால், நேர்மையாகச் செலுத்தும் உங்களின் வாக்குகளே நீண்டநாள் நிலைத்த பலனைத் தரும் என்பதை உணர்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அடுத்து, ஒட்டுமொத்தத் தமிழக வாக்காளர்களுக்கான கேள்வி. ஆறாயிரம் கொடுத்த பின்பும் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு இல்லையே என்று சுயேச்சைக்குத் துணைபோன கறுப்பு ஆடுகளைக் கண்டுபிடித்து, கட்சியை விட்டு நீக்குகிறார்களாம் ஆளுகிறவர்கள். இந்தத் திருடன்-திருடன் விளையாட்டை எப்போது முடித்துக்கொள்வதாய் உத்தேசம் திருவாளர்களே? இந்தத் திருடன் – திருடன் விளையாட்டை எப்போது முடிவுக்குக் கொண்டுவரப்போகிறீர்கள் வாக்காளர்களே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Rk nagar election is crime says kamal haasan
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்
புலி எப்போதும் இப்படி கோபத்தை கட்டுப்படுத்தாது: எச்சரிக்கை வீடியோ
காயமடைந்தாலும் விளையாட தயாராக இருந்தேன் : மனம் திறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா
பிப்.18 முதல் ஆன்லைன் வகுப்பு? தெளிவு படுத்துமா அண்ணா பல்கலைக்கழகம்?
ஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்