ஆன்லைன் சூதாட்ட விளையாட்டான ரம்மி விளையாட்டு, மதுரை அருகே இருவரின் உயிரை பறித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திசூயுள்ளது.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வேங்கடசுப்பிரமணியன். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் டேட்டா அனலைசிஸ் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தன்னுடைய துறை சார்ந்த ஆய்வில் ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், பல்வேறு நிறுவனங்களின் ஆலோசகராவும் இருந்து வந்தார்.
ஆய்வு மாணவியாக வந்த மதுரை திருநகரை சேர்ந்த பட்டு மீனாட்சியை காதலித்து, கடந்த 2014ம் ஆண்டில் கரம்பிடித்தார். இவர்களுக்கு தற்போதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. இருந்தபோதிலும் அவர்கள் மகிழ்ச்சியாக தான் இருந்துவந்துள்ளனர். ஆன்லைன் வர்த்தகம் செய்வது, ஆன்லைனில் சூதாட்டம் என செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சிலநாட்களாக இவர்களின் வீடு நிசப்தநிலையில் இருந்ததுடன், அப்பகுதியில் இருந்த துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், நாகமலை புதுக்கோட்டை போலீசில் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தபோது அவர்கள் கோரமான நிலையில் தூக்கில் பிணமாக தொங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடல்களை பரிசோதனைக்காக, மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இவர்களின் மரணம் தொடர்பாக, அக்கம்பக்கத்தினர் கூறியதாவது, மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்த இவர்கள், ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலமாக அதிக பணத்தை இழந்துவிட்டார்கள். அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தை இல்லாத சோகமும் இவர்களை வாட்டி வந்ததாகவும், இதன்காரணமாகவும் இத்தகைய முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்தனர். போலீசார் அங்கு கிடைத்த தடயங்கள் மற்றும் ஆவணங்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.