Advertisment

மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை திறப்பு

Sabarimala temple opens for Mandala pooja pilgrimage season today: மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு; பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?

author-image
WebDesk
New Update
மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை திறப்பு

மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை திறக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இந்நிகழ்வில், சபரி மலை கோயிலின் மேல்சாந்தி, மாலிகபுரம் கோயில் மேல்சாந்தி, ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கலச பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தினார்.

கார்த்திகை மாத பிறப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சபரிமலை செல்லும் பக்தர்கள் இம்முறை பம்பை ஆற்றில் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் காலை முதல் பகல் 12 மணி வரை சாமிக்கு நெய்யபிஷேகம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டும் பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லிலேயே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. இந்த சீசனுக்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது. மேலும் புத்தாண்டு தரிசனத்துக்கான முன்பதிவு நிறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய 12 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் முன்பதிவு செய்துள்ள நாட்களில், குறிப்பிட்டுள்ள நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

முன்பதிவு செய்தவர்கள் வராமல் இருக்கும் நாட்களில், சபரிமலை சென்று உடனடியாக முன் பதிவு செய்தும் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக நிலக்கல்லில் 5 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகை அதிகரித்தால் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போட்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மலைப்பாங்கான சபரிமலையில் இன்று தொடங்கும் யாத்திரை சீசனை கருத்தில் கொண்டு, பக்தர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்க கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜெரோஜ் தெரிவித்துள்ளார்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகளைத் தவிர,  ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களிலும் பக்தர்கள் மருத்துவ உதவியைப் பெறலாம். பல நடமாடும் மருத்துவ பிரிவுகளுடன் நன்கு இணைக்கப்பட்ட மற்றும் விரிவான ஆம்புலன்ஸ் நெட்வொர்க் உள்ளது. அதுமட்டுமின்றி 15 அடிப்படை லைஃப் சப்போர்ட் (BLS) ஆம்புலன்ஸ்கள், ஒரு கூடுதல் லைஃப் சப்போர்ட் (ALS) மற்றும் இரண்டு மினிபஸ்கள் மருத்துவ சேவைக்காக உள்ளன.

பக்தர்கள் எருமேலி சமூக சுகாதார மையம், கோழஞ்சேரி மாவட்ட மருத்துவமனை, ரன்னி பெரிநாடு சமூக சுகாதார நிலையம், ரன்னி தாலுக்கா தலைமையக மருத்துவமனை, பந்தளம் வலிகோய்க்கல் கோயில் நடுவழி முகாம், அடூர் மாவட்ட மருத்துவமனை, முண்டகாயம் தாலுகா மருத்துவமனை, காஞ்சிரப்பள்ளி பொது மருத்துவமனை, வண்டிப்பெரியார் சுகாதார மையம், குமளி ஆரம்ப சுகாதார நிலையம், செங்கனூர் மாவட்ட மருத்துவமனை மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட மருத்துவமனை ஆகிய இடங்களில் மருத்துவ சிகிச்சை பெறலாம். அதுமட்டுமின்றி செங்கனூர் ரயில் நிலையம் மற்றும் மகாதேவர் கோயிலில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிலக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில்,  சரல்மேடு மருத்துவமனை, எருமேலி சமுதாயக்கூடம் மற்றும் பத்தனம்திட்டா பொது மருத்துவமனை டாக்டர்கள் மற்ற துணை ஊழியர்களுடன் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார். இரண்டு இருதயநோய் நிபுணர்கள், இரண்டு நுரையீரல் நிபுணர்கள், ஐந்து மருத்துவர்கள், ஐந்து  எலும்பியல் மருத்துவர்கள், நான்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மூன்று மயக்க நிபுணர்கள், எட்டு உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் பக்தர்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர ஆறு லேப் டெக்னீஷியன்கள், 13 மருந்தாளுனர்கள், 19 பணியாளர் செவிலியர்கள், 11 நர்சிங் உதவியாளர்கள், 17 மருத்துவமனை உதவியாளர்கள், நான்கு ரேடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, அனைத்து அவசர மருத்துவ மையங்களிலும், செவிலியர்கள் இருப்பர்.

தொற்றுநோய்களைத் தடுக்கவும், கொசு ஒழிப்பு இயக்கங்களை நடத்தவும் சிறப்புக் குழுக்கள் பொறுப்பேற்றுள்ளன. சன்னிதானம் மற்றும் அருகிலுள்ள இடங்களில் உள்ள தண்ணீர் தேவையான தரத்தில் உள்ளதா என்பதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்வார்கள். லெப்டோஸ்பிரோசிஸ் மற்றும் பாம்பு விஷத்திற்கு எதிரான தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் டாக்ஸிசைக்ளின் காப்ஸ்யூல்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மருத்துவ உதவிக்கு, பக்தர்கள் திஷா 104, 1056, 0471 2552056, 2551056 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். என கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Kerala Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment