Advertisment

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான தமிழர்! - யார் இந்த சோ.தர்மன்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sahitya akademi award who is Cho Dharman - சாகித்ய அகாடமி விருது தமிழர்! - யார் இந்த சோ.தர்மன்?

sahitya akademi award who is Cho Dharman - சாகித்ய அகாடமி விருது தமிழர்! - யார் இந்த சோ.தர்மன்?

காங்கிரஸ் எம்.பி சசி தரூர், நாடக ஆசிரியர் நந்த் கிஷோர், தமிழக எழுத்தாளர் சோ.தர்மன் உள்ளிட்ட 23 எழுத்தாளர்கள் 2019-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருதாகும். தலைசிறந்த நாவல், சிறுகதை நாடகம் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சாகித்ய அகாடமி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் கம்பர், செயலாளர் கே. சீனவாச ராவ் ஆகியோர் தலைமையில் நிர்வாகக் குழு கூடி இந்த விருதுகளை அறிவித்தது. இந்த ஆண்டு 23 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுதிய 'An Era of Darkness' என்ற ஆங்கில நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

7 கவிஞர்கள் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புகான் பாசுமடாரி (போடோ), நந்த் கிஷோர் ஆச்சார்யா (இந்தி),நிபா ஏ காண்டேகர் (கொங்கனி), குமார் மணிஷ் அரவிந்த் (மைதிலி), வி. மதுசூதனன் நாயர் (மலையாளம்), அனுராதா பாட்டீல் ( மாராத்தி), பென்னா மதுசூதன் (சமஸ்கிருதம்) ஆகியோர் சாகித்ய அகாடமி விருத்துக்குத் தேர்வாகியுள்ளனர்.

நாவல்களில் அசாம் எழுத்தாளர் ஜோய்ஸ்ரீ கோஸாமி மகந்தா, மணிப்பூர் எழுத்தாளர் பிர்மங்கோல் சிங், தமிழ் எழுத்தாளர் சோ. தர்மன், தெலுங்கு எழுத்தாளர் பந்தி நாராயன் சுவாமி ஆகியோர் சாகித்ய அகாடமி விருது பெற உள்ளனர்.

ஆங்கிலத்தில் சசி தரூர், கன்னடத்தில் விஜயா, உருது மொழியில் ஷாபே கிட்வாய் ஆகியோர் சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்பு நூல் எழுதியமைக்காக சாகித்ய அகாடமி விருத்துக்குத் தேர்வாகியுள்ளனர்.

மேலும், வங்காள மொழி எழுத்தாளர் சின்மாய் குஹா, டோக்ரி எழுத்தாளர் ஓம் சர்மா ஜந்த்ரிரி, குஜராத்தி எழுத்தாளர் ரதிலால் போரிசாகர் ஆகியோரும் விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.

2020-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் விருதுக்குத் தேர்வாகிய 23 பேருக்கும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், பட்டயமும் வழங்கப்படும்.

இந்நிலையில், விருது வென்ற  தமிழ் எழுத்தாளர் சோ. தர்மனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யார் இந்த சோ.தர்மன்?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள உருளைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சோ.தர்மன். இவரது இயற்பெயர் தர்மராஜ். இவர், எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்கு தான் 2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் `சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியிலுள்ள தனியார் பஞ்சாலையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

1980-ம் ஆண்டு தன் எழுத்துப் பணியை தொடங்கிய சோ.தர்மன், இதுவரை 13 நூல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள் எழுதியுள்ளார். ஒவ்வொரு நாவலையும் எழுதி முடிக்க இவர் எடுத்துக்கொண்டது 10 ஆண்டுகளாகும். 2016-ம் ஆண்டு பிரசுரமான ‘சூல்’ நாவலுக்காகத்தான் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எழுத்தாளர் சோ.தர்மன், "நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது தமிழகம் முழுவதிலும் 39,640 கண்மாய்கள் இருந்தன. அந்தக் கண்மாய்களின் இன்றைய நிலை என்ன என்பதுதான் 'சூல்' நாவலின் மையக்கரு. தற்போது மிக முக்கியப் பிரச்னையாகவும் அவசியமான தேவையாகவும் இருப்பது தண்ணீர்தான். கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதுமே மானாவாரி நிலங்கள்தான்.

பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கண்மாய்கள் அனைத்துமே அந்தந்தக் கிராம மக்களின் கட்டுப்பாட்டில் பயன்பாட்டில் இருந்தன. மராமத்துகளைக் கிராம மக்களே செய்து கொள்வார்கள். தற்போது அந்தக் கண்மாய்கள் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகிய நான்கு பூதங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதனால், அனுமதியில்லாமல் ஒரு கைப்பிடி மண் கூட அள்ள முடியாது. "கண்மாய்களை முறையாக மராமத்து செய்யாததும், அதில் விவசாயிகளை மண் எடுக்க அனுமதிக்காததும்தான் விவசாய நலிவுக்கு முக்கிய காரணம்" என அந்நாவலில் எழுதியுள்ளேன். அடிப்படையில் நான் ஒரு விவசாயி. என்னுடைய 10 ஏக்கர் நிலம் தண்ணீர் இல்லாமல்தான் தரிசாகக் கிடக்கிறது. இந்த தரிசுநிலம்தான், இந்த நாவலை எழுத தூண்டுதலாக இருந்தது. 'சூல்' என்றால், நிறைசூலி என்பது பொருள். ஒரு கண்மாயில் மீன்கள், தவளைகள்... என நீர்வாழ் உயிர்கள் வாழ்வதுடன் இனப்பெருக்கம் செய்துகொண்டே இருக்கும்.

எனவே, பிரசவிக்கும் தாயாக அந்த நாவலை உருவகப்படுத்தி உள்ளேன். மாநில அளவில் அறியப்பட்ட எழுத்தாளர்கள் பலர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்கள்தாம். எங்களுக்கு கருத்தைப் புரிய வைத்தும், எழுத்தை எழுத வைத்தும், தட்டிக்கொடுத்தது எங்கள் ஆசான் `கி.ரா’தான். கோவில்பட்டியை மையமாக வைத்து பல விருதுகள் கிடைக்க காரணமும் அவர்தான்.

இந்த நாவலுக்கு பல அங்கீகாரம் கிடைத்தபோதிலும், தற்போது கிடைத்துள்ள மத்திய அரசின் அங்கீகாரத்தால் எனக்கு கடமைகள் அதிகரித்துள்ளன. இந்த விருதை என் உருளைகுடி கிராம மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment