சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை: எதிர்ப்பு கூட்டம் நடத்த அனுமதி கேட்டவருக்கு ஐகோர்ட் அறிவுரை

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து நீதிமன்ற அறையில் இருந்த வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்டார். பெரும்பாலான வழக்கறிஞர்கள் திட்டத்தை வரவேற்று கருத்து தெரிவித்தனர்.

சேலம் – சென்னை பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அது தொடர்பான போராட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது.

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் சாத்தூர் மாரியம்மன் கோயில் திடலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தலைமையில் வரும் 8 ஆம் தேதி பொது கூட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட கோரி சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திர குமார் உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்த போது அமைதியான முறையில் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி ஓமலூர் காவல் ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்த மனுகள் பரிசீலிக்கப் படவில்லை என மனுதரார் தரப்பில் வாதிட்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து நீதிமன்ற அறையில் இருந்த வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்டார். பெரும்பாலான வழக்கறிஞர்கள் திட்டத்தை வரவேற்று கருத்து தெரிவித்ததை சுட்டிக் காட்டிய நீதிபதி, முதன்முறையாக சென்னை – சேலம் 8 வழி சாலை அமைக்கும் பெரும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டம் இரு பெரும் நகரங்களுக்கு இடையே உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் என்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்சாலைகள் அமையவும் இந்த திட்டம் வாய்ப்பளிக்கும் என்றார்.

மேலும் சரக்குகள் குறித்த நேரத்தில் சென்றடைந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும், திட்டத்தின் பலனை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பொது கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

×Close
×Close